அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள் போராட்டம்
திருக்கோவிலூர் அருகே அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே சு.பில்ராம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தபள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் இப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவ-மாணவிகள் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரகண்டநல்லூர், கண்டாச்சிபுரம் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு சென்று பெரும் சிரமங்களுக்கு இடையே படித்து வருகிறார்கள்.
ஆகவே மாணவ-மாணவிகள் நலன்கருதி சு.பில்ராம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி இக்கிராம மக்கள் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இருப்பினும் பள்ளியை தரம் உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், தாசில்தார் புஷ்பா, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் புஷ்பராணி, ஆனந்தி மற்றும் அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடிய விரைவில் இப்பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து மாணவர்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story