நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி


நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி
x
தினத்தந்தி 15 Aug 2018 4:41 AM IST (Updated: 15 Aug 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

“கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் நாங்கள் அணைகளை கட்டி இருப்பது தமிழகத்தை காப்பாற்றுவதற்காக அல்ல” என்று முதல்-மந்திரி குமாரசாமி ஆவேசமாக கூறினார்.

மங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் இரவு தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, தாய் சென்னம்மா, மனைவி அனிதா ஆகியோருடன் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு சென்றார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர்கள் அனைவரும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

முன்னதாக குமாரசாமி கார் மூலம் சிராடி மலைப்பாதை வழியாக தர்மஸ்தலாவுக்கு வர இருந்தார். ஆனால், சிராடி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் அவர், வேறு வழியாக தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு வந்தார்.

மஞ்சுநாதா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“கர்நாடக மாநிலத்தில் அதிகளவு மழை பெய்துள்ளது. குறிப்பாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்துள்ளது. மழை சேத பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்திருந்தேன். ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், ஆலோசனை கூட்டம் நடத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறிய செயலாகும்.

தேர்தல் முடிந்த பிறகு தட்சிண கன்னடா மாவட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். அரசிடம் தற்போது நிதி பற்றாக்குறை எதுவும் இல்லை. நான் முதல்-மந்திரி ஆன பிறகு 3 முறை டெல்லிக்கு சென்று வந்துள்ளேன். நான் தனி விமானத்தை பயன்படுத்தவில்லை. அரசு பணத்தை வீணாக செலவு செய்யவில்லை”

இதையடுத்து குமாரசாமி தனது குடும்பத்தினருடன் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு சொந்தமான விடுதியில் ஓய்வெடுத்தார். பின்னர் அவர்கள் நேற்று காலை பெல்தங்கடியில் இருந்து புத்தூர் அருகே குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி, குக்கே சுப்பிரமணியா கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், வருங்காலத்திலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் அணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்காகவும், தமிழகத்தை காப்பாற்றவும் நாங்கள் அணைகள் கட்டவில்லை. தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் செவிசாய்க்க கூடாது. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். மேலும் ஒரு அணை கட்டும்போது தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைக்க முடியும். சேமிப்பும் அதிகமாகும். மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் தமிழகத்துக்கும் நன்மை கிடைக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-மந்திரி குமாரசாமி வருகையையொட்டி புத்தூர், பெல்தங்கடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிகாந்தே கவுடா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story