மகதாயி நதிநீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் தீர்ப்பு கர்நாடகத்திற்கு 13.42 டி.எம்.சி. நீர் ஒதுக்கீடு


மகதாயி நதிநீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் தீர்ப்பு கர்நாடகத்திற்கு 13.42 டி.எம்.சி. நீர் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 15 Aug 2018 5:00 AM IST (Updated: 15 Aug 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

மகதாயி நதிநீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் நேற்று தீர்ப்பை அறிவித்தது. கர்நாடகத்திற்கு 13.42 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை போராட்ட குழுவினர் வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பெங்களூரு,

மகதாயி நதி கர்நாடக மாநிலம் பெலகாவியில் உற்பத்தியாகி மராட்டிய மாநில எல்லைக்குள் சிறிது தூரம் பாய்ந்து, கோவா மாநிலத்திற்கு சென்று கடலில் கலக்கிறது.

இந்த மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், கோவா, மராட்டியம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை எழுந்தது. இது தொடர்பாக அந்த மாநிலங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. மத்திய அரசின் தலையிட்டும் கூட பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

சுப்ரீம் கோர்ட்டில் கோவா வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் 16-ந் தேதி மகதாயி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு வட கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கு மகதாயி நதியில் 7.56 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) அனுமதிக்க கோரி கர்நாடகம் சார்பில் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு 2016-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் போராட்டம் வெடித்தது. பிரதமர் மோடி தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இந்த விஷயத்தில் பிரதமர் மவுனம் வகித்தார். நடுவர் மன்றத்தில் வழக்கு உள்ளதால், அதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று பா.ஜனதா கூறியது. ஆயினும் வட கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு வகையான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இதற்கிடையே மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை நடுவர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜே.எஸ்.பன்சால் தலைமையில் நீதிபதிகள் வினய் மிட்டல், பி.எஸ்.நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. கர்நாடகம் 36.558 டி.எம்.சி. நீரும், கோவா 122.60 டி.எம்.சி. நீரும், மராட்டியம் 6.35 டி.எம்.சி. நீரும் ஒதுக்குமாறு கோரியது. கர்நாடகம் கேட்ட நீர் ஒதுக்கீட்டில் 7.56 டி.எம்.சி. நீர் குடிநீர் தேவைக்கானது. (அதாவது கலசா-பண்டூரி திட்ட பயன்பாட்டுக்கு உட்பட்டது.)

இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் ஆகஸ்டு 14-ந் தேதி(நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி மகதாயி நடுவர் மன்றம் நேற்று தனது தீர்ப்பை அறிவித்தது. அந்த தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

மகதாயி நதியில் மொத்தம் 188.06 டி.எம்.சி. நீர் கிடைக்கிறது. இதில் கர்நாடகத்திற்கு 13.42 டி.எம்.சி.யும், கோவாவுக்கு 24 டி.எம்.சி.யும், மராட்டியத்திற்கு 1.3 டி.எம்.சி.யும் ஒதுக்கப்படுகிறது. கர்நாடகத்திற்கான ஒதுக்கீட்டில் குடிநீர் பயன்பாட்டிற்கு 4 டி.எம்.சி.யும், நீர் மின் உற்பத்தி திட்டத்திற்கு 8.02 டி.எம்.சி.யும், மல்லபிரபா படுகை பகுதி பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு 1.5 டி.எம்.சி.யும் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடகம் சார்பில் ஆஜரான வக்கீல் மோகன் காதரகி டெல்லியில் கூறுகையில், “இந்த மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை வழக்கில் கர்நாடகத்திற்கு பாதி வெற்றி கிடைத்துள்ளது. கர்நாடகத்திற்கு இன்னும் கூடுதலாக நீரை ஒதுக்கி இருக்க வேண்டும். இந்த தீர்ப்பை நாங்கள் முழுமையாக ஆய்வு செய்த பிறகு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதா? அல்லது வழிகாட்டுதல் மனுவை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்வதா? என்பது குறித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்“ என்றார்.

நடுவர் மன்றத்தின் இந்த தீர்ப்பை மகதாயி போராட்டக்குழுவின் தலைவர் வீரேஷ் சோபரமட வரவேற்றுள்ளார். இந்த தீர்ப்பு தங்களுக்கு சிறிதளவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வட கர்நாடகத்தில் விவசாயிகள் இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் சில விவசாயிகள் சங்கத்தினர் இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை என்று தெரிவித்தனர்.

Next Story