அந்தேரியில் வியாபாரியை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் ஒருவர் கைது


அந்தேரியில் வியாபாரியை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2018 5:09 AM IST (Updated: 15 Aug 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரியில் வியாபாரி துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

மும்பை அந்தேரி மரோல் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாம் வலிகான் (வயது58). வியாபாரியான இவர், அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். அண்மையில் இவர், கட்டிட வளாகத்தில் தனது காரை நிறுத்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் இஸ்லாம் வலிகானை சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இதில், துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், அக்ரிபாடாவை சேர்ந்த பழைய பொருள் வியாபாரி சையத் சாகா (54) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அவர், இஸ்லாம் வலிகானை தீர்த்து கட்ட கூலிப்படையை ஏவிவிட்டது கண்டறியப் பட்டது.

இதையடுத்து போலீசார் சையத் சாகாவை கைது செய்தனர். மேலும் கூலிப்படையை சேர்ந்த 2 பேரையும் பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story