கண்ணமங்கலம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


கண்ணமங்கலம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 Aug 2018 5:29 AM IST (Updated: 15 Aug 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் கிராமம் செல்லும் சாலையில் ஆளில்லா ரெயில்வே கேட் உள்ளது. தற்போது இந்த ரெயில்வே கேட் அடியில் பொதுமக்கள் சென்றுவர சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே துறை மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது.

ஆனால் அம்மாபாளையம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், ரெயில்வே கேட் அருகே ஏரி நீர்வரத்துக் கால்வாய் உள்ளது. சுரங்கப்பாதை அமைத்தால் தண்ணீர் வரத்து பாதிப்பு ஏற்பட்டு, போக்குவரத்து தடைப்படும். எனவே ஆளில்லா ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் ரெயில்வே ஒப்பந்ததாரர் சுரங்கப்பாதை அமைக்க தேவையான சிமெண்டு பாலங்களை சில மாதங்களாக அருகில் உள்ள தனியார் நிலத்தை வாடகை எடுத்து செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுரங்கப்பாதை தோண்டுவதற்காக ராட்சத எந்திரங்களை ரெயில்வேதுறை அதிகாரிகள் லாரி மூலம் கொண்டு வந்ததை பொதுமக்கள் பார்த்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்த எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

சுரங்கப்பாதை அமைப்பதை தடை செய்யவேண்டும் என அம்மாபாளையம் பகுதி விவசாயிகள் கடந்த வாரம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் புகார் செய்தனர்.

மேலும் ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) தண்டாயுதபாணி, தாசில்தார் கிருஷ்ணசாமி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு இருப்பதால் சுரங்கப்பாதை அமைக்கக்கூடாது என ரெயில்வேதுறை மற்றும் ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கினர்.

ஆனால் இதையெல்லாம் ரெயில்வே துறையினர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அளவீடு செய்வது உள்பட சுரங்கப்பாதை அமைக்க தேவையான அனைத்து பணிகளையும் செய்து வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அம்மாபாளையம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று அம்மாபாளையம் ரெயில்வே கேட்டிற்கு திரண்டு வந்தனர்.

அப்போது இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தால் பொதுமக்களை ஒன்று திரட்டி சாலைமறியல் செய்வோம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் சுபிச்சந்தர், கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி ஆகியோர் பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக அம்மாபாளையம் ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Next Story