சுதந்திர தின விடுமுறையையொட்டி கல்லணையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்


சுதந்திர தின விடுமுறையையொட்டி கல்லணையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2018 4:30 AM IST (Updated: 16 Aug 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தின விடுமுறையையொட்டி கல்லணையில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் அலைமோதியதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு என கடந்த மாதம்(ஜூலை) 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணைக்கு 22-ந் தேதி வந்து சேர்ந்து அன்றே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்ட நாளிலும் அதன் பின்னர் வந்த விடுமுறை நாட்களிலும் கல்லணையை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதிலும் சுதந்திர தின விடுமுறைநாளான நேற்று காலை முதலே கல்லணையை சுற்றிப்பார்க்க தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். நேரம் செல்லச்செல்ல இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என கூட்டம் அலை அலையாக வந்து கொண்டே இருந்தது.

கல்லணையை சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் கல்லணை பாலங்களின் மேல் நின்று கொண்டு அணையில் இருந்து பீறிட்டு வெளியேறும் நீரின் அழகை உற்சாகமாக பார்த்து ரசித்தனர். தங்கள் குழந்தைகளுடன் வந்தவர்கள் கல்லணை விநாயகர் கோவில் அருகில் உள்ள பூங்காவில், சிறுவர் விளையாட்டு அரங்கில் தங்கள் குழந்தைகளை விளையாட விட்டு ரசித்தனர்.

கரிகாலன் பூங்கா, காவிரி விளக்க கூடம், கரிகாலன் மணிமண்டபம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தஞ்சை, திருச்சி பகுதிகளில் இருந்து கார், வேன், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் கல்லணைக்கு வந்ததால் கல்லணை பாலங் களில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

காவிரி வெண்ணாறு பாலத்தின் நடுவில் பாராஷெட் அருகில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. கல்லணையை சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகள், பொதுப்பணித்துறை ஊழியர்கள், போலீசார் தடுத்தும் கேட்காமல் பாலத்தில் உள்ள மதகுகளை ஏற்றி இறக்க ஊழியர்கள் பயன்படுத்தும் குறுகலான ஆபத்தான பாதையில் நடந்து சென்றனர்.

நேற்று தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருந்ததால் ஆற்றில் இறங்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. கல்லணை பூங்கா அருகில் கோவிலடி வாய்க்கால் என்ற சிறிய வாய்க்காலில் சுற்றுலா பயணிகள், குழந்தைகள், பெண்கள் குளித்து மகிழ்ந்தனர். 

Next Story