ஸ்ரீபெரும்புதூர் அருகே சமையல் எரிவாயு கிடங்கில் தாசில்தார் திடீர் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர் கியாஸ் ஏஜென்சி கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வாலாஜாபாத்,
ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட மலைப்பட்டு கிராமத்தில் லிம்ரா கியாஸ் ஏஜென்சி என்ற பெயரில் சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த முகமது அபுபக்கர் என்பவருக்கு சொந்தமான சமையல் எரிவாயு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் லிம்ரா கியாஸ் ஏஜென்சி கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். எரிவாயு கிடங்கு நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆவணங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது வருவாய்த்துறை அளித்திருந்த ஆவணத்தை சரிபார்த்த போது அதில் அதிகாரிகளின் கையொப்பங்கள் வெவ்வேறு இடத்தில் இருந்தது. இதில் சந்தேகம் அடைந்த தாசில்தார் ரமேஷ், இதுகுறித்து உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது அங்கு இருந்த வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் முகவர்கள் மூலம் பெறப்பட்டது தெரியவந்தது. அதனால் போலி ஆவணங்கள் மூலம் கியாஸ் ஏஜென்சி கிடங்கு நடத்த அனுமதி பெற்று இருப்பது ஆய்வின் மூலம் அம்பலமாகி உள்ளது.
ஆவணங்களை கைப்பற்றி அதில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். மாவட்ட வருவாய்த்துறை அலுவலரின் நடவடிக்கையின் பேரில் கியாஸ் ஏஜென்சி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Related Tags :
Next Story