போலீஸ் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வழக்கில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


போலீஸ் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வழக்கில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 16 Aug 2018 4:45 AM IST (Updated: 16 Aug 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வழக்கில் இலங்கை அகதி உள்பட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி,

ஈரோடு மாவட்டத்தில் கியூ பிரான்ஞ் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் செல்லத்துரை (வயது 46). இவர் கோவை மாவட்ட கியூ பிரான்ஞ் பிரிவை கூடுதலாக கவனித்து வருகிறார். பொள்ளாச்சி கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் போலி சிம்கார்டுகள் வாங்கியது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் செல்லத்துரை (46), சப்-இன்ஸ்பெக்டர் ரூபன் (54), தலைமை காவலர் மோகனசுந்தரம் (41), போலீஸ்காரர் பழனிராஜ் (44) ஆகியோர் பொள்ளாச்சிக்கு கடந்த மாதம் 19-ந்தேதி வந்தனர்.

பின்னர் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு செல்ல புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுரங்க பாதை வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சுரங்க பாதை படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போளுவாம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த விஜய், பொள்ளாச்சி வெங்கடேசா காலனியை சேர்ந்த பிரேம்குமார், மரப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீநாத் ஆகியோர் கியூ பிரான்ஞ் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை உள்பட போலீசாரை கத்தியால் குத்தி விட்டு, தடுக்க வந்த பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில் பிரேம்குமார் மீது மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, மற்றும் கஞ்சா, அரிசி கடத்தல் வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக அவர் சிறை சென்று உள்ளார். மேலும் விஜய் மீது கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு, ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. எனவே பிரேம்குமார், விஜய் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

 இதை தொடர்ந்து பிரேம்குமார் கோவை மத்திய சிறையிலும், இலங்கை அகதி விஜய் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவு நகலை துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் நடேசன் ஆகியோர் கோவை, சென்னை சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.

Next Story