சுதந்திரதினவிழாவில் 106 பேருக்கு நலத்திட்ட உதவிகள், கலெக்டர் சிவஞானம் வழங்கினார்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் 106 பேருக்கு ரூ.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.
விருதுநகர்,
சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி மகிழப்பட்டது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்முறையாக சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் சிவஞானம் காலை 9.30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
142 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். சிறப்பாக சேவை புரிந்த வெம்பக்கோட்டை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் உள்பட 70 போலீசாருக்கு சேவையை பாராட்டியும் தொடர்ந்து சிறப்பாக சேவை புரிய வாழ்த்தியும் சான்றிதழ் வழங்கினார். பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 106 பேருக்கு ரூ.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 17 கல்லூரி, பள்ளி மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். முன்னதாக விழாவுக்கு வந்த கலெக்டர் சிவஞானத்தை மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
கடந்த ஆண்டுவரை ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா இந்த ஆண்டு மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு மாற்றப்பட்டது. இதனையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்கம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி பரிமளா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் தேசபந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வருமான வரித்துறை துணைஆணையர் கலைச்செல்வி கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தலைமை ஆசிரியர் மோகன் சுதந்திர போராட்ட தியாகிகளின் பெருமைகளை எடுத்துக்கூறினார். பள்ளி மாணவ–மாணவிகளின் அணிவகுப்பும் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன. ஆசிரியை சர்மிளா விழாவினை தொகுத்து வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ராஜேஷ், பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் சத்திரிய வித்யா சாலா பள்ளிகளில் பள்ளி செயலர் மதன்மோகன் தலைமையில் சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. விருதுநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.