12 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு
12 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி அளவில் 100.09 அடியாக இருந்தது. அதைத்தொடர்ந்தும் தண்ணீர் வந்துகொண்டு இருந்ததால் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. இரவு 11 மணிஅளவில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அணை முழுகொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் அதிகாரிகள் பவானிசாகர் அணைக்கு சென்று பார்வையிட்டனர். அணையின் மேல்பகுதிக்கு சென்ற கலெக்டர் பிரபாகர் மற்றும் அதிகாரிகள் தண்ணீர் வரத்து பற்றியும், அணையின் நீர்மட்டம் குறித்தும் ஆலோசனை செய்தனர்.
இந்தநிலையில் இரவு 11.30 மணிஅளவில் அணையின் நீர்மட்டம் 101.11 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீரை திறக்க கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார். அதன்பின்னர் அணையின் மேல்மதகு வழியாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறும்போது,
‘‘பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளதால் பவானி ஆற்றங்கரையோரமாக வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 102 அடி நீர்மட்டம் உயரும் வரை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு உயர்த்தப்படும். அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரிநீராக பவானி ஆற்றில் திறந்துவிடப்படும்’’, என்றார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணையின் மேல்மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.