ஒவ்வொரு கிராமமும் சுகாதாரத்தில் முன்மாதிரியாக விளங்க வேண்டும்


ஒவ்வொரு கிராமமும் சுகாதாரத்தில் முன்மாதிரியாக விளங்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Aug 2018 3:00 AM IST (Updated: 16 Aug 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு கிராமமும் சுகாதாரத்தில் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்று கெடாரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசினார்.

விழுப்புரம், 


சுதந்திர தின விழாவையொட்டி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,099 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காணை ஊராட்சி ஒன்றியம் கெடார் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தனிநபர் கழிவறை கட்டுவதற்கு அரசு மானியமாக ரூ.12 ஆயிரம் வழங்கி வருகிறது. வீடுகளில் கழிவறை கட்டி பயன்படுத்துவதன் மூலம் மக்கள் சுகாதாரமாக வசிக்க முடியும். ஒவ்வொரு கிராமமும் திறந்தவெளி மலம் கழிக்காத கிராமமாக திகழ்ந்து சுகாதாரத்தில் முன்மாதிரியாக விளங்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிகளவு பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வீட்டில் இருக்கும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தென்னை மட்டைகள், டயர்கள் போன்றவைகளில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உருவாகி டெங்கு காய்ச்சல் பரவ காரணமாய் அமைகிறது. எனவே இவைகளை தவிர்த்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். குழந்தை திருமணத்தை முற்றிலுமாக ஒழித்து குழந்தை திருமணம் இல்லாத கிராமமாக ஒவ்வொரு கிராமத்தையும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஸ்ரீனிவாசன், உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பாலுசாமி, ஜெமினி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சையத்மெகமூத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவேலு, ஆனந்தலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story