சுதந்திர தின விழா: கலெக்டர் சுப்பிரமணியன் தேசிய கொடி ஏற்றினார்
விழுப்புரத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சுப்பிரமணியன் தேசிய கொடி ஏற்றினார்.
விழுப்புரம்,
இந்தியாவின் 72-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நேற்று காலை சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழா நடைபெறும் மைதானத்திற்கு காலை 9.15 மணிக்கு கலெக்டர் எல்.சுப்பிரமணியன் வருகை தந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வரவேற்றார். சரியாக 9.20 மணிக்கு கலெக்டர் சுப்பிரமணியன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் போலீஸ் ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதேபோல் தீயணைப்புத்துறை, வனத்துறை, ஊர்க்காவல் படை, சாரண, சாரணீயர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரின் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் வண்ண, வண்ண பலூன்களையும், அமைதியை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும் பறக்க விட்டனர். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கே கலெக்டர் சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவுப்பரிசு வழங்கினார்.
அதன் பிறகு கலெக்டர் சுப்பிரமணியன், ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு திருமண நிதி உதவி மற்றும் ஈமச்சடங்கு உதவியாக ரூ.40 ஆயிரமும், வருவாய்த்துறை சார்பில் 62 பேருக்கு திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, சாலை விபத்து நிவாரண தொகையாக ரூ.4 லட்சத்து 10 ஆயிரமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 7 பேருக்கு ரூ.35 ஆயிரத்து 126 மதிப்பில் சலவைப்பெட்டிகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 4 பேருக்கு ரூ.39 ஆயிரம் மதிப்பில் தையல் எந்திரம், சலவைப்பெட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 680 மதிப்பில் ஸ்கூட்டர்களும், தோட்டக்கலைத்துறை சார்பில் 6 பேருக்கு ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 500 மதிப்பில் பசுமைக்குடில், பவர் வீடர், பவர் டில்லர்களும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 880 மதிப்பில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மழைத்தூவான்களும், தாட்கோ மூலம் 11 பேருக்கு ரூ.97 லட்சத்து 58 ஆயிரத்து 45 மதிப்பில் மானிய திட்டத்தில் வாகனங்களும், சிறுசேமிப்பு பிரிவு சார்பில் 6 பேருக்கு ரூ.12 ஆயிரத்தில் சிறுசேமிப்பு குழுவின் மூலமாக பரிசுத்தொகையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 5 பேருக்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு வேலைக்கான உத்தரவு என ஆக மொத்தம் 116 பேருக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 90 ஆயிரத்து 231 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வனத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார். அதேபோல் சிறப்பாக பணியாற்றிய போலீசார்களுக்கு முதல்-அமைச்சரின் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து விழுப்புரம் சாலாமேடு ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, திருநாவலூர் ஈஷா வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மணியார்பாளையம் ஜி.டி.ஆர். மேல்நிலைப்பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, முண்டியம்பாக்கம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் கலெக்டர் சுப்பிரமணியன் பரிசு வழங்கினார்.
விழாவில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, உதவி கலெக்டர்கள் (பயிற்சி) காயத்திரி, வித்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர், வெள்ளைச்சாமி, ஊர்காவல் படை மண்டல தளபதி ஸ்ரீதரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பத்மநாபன், கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சையத்மெகமூத் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, உடற்கல்வி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
Related Tags :
Next Story