கிராம மக்கள் தொழில் தொடங்கி வருவாய் ஈட்ட நடவடிக்கை
கிராமமக்கள் தொழில் தொடங்கி வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிரிக்குப்பத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தண்டபாணி கூறினார்.
கடலூர்,
சுதந்திரதினவிழாவையொட்டி கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் தண்டபாணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசு அனைத்து கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக வருவாய் ஆய்வாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், கால்நடை மற்றும் வேளாண்மைத்துறை பணியாளர்கள், துறை அலுவலர்கள் ஆகியோரைகொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். கிராமமக்கள் தொழில்தொடங்கி அதன் மூலம் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் பராமரிப்பு மற்றும் அவற்றின் தொடர் செயல்பாடு குறித்தும் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்தும், கிராம ஊராட்சியில் கழிப்பறை கட்டாமலும், பயன்படுத்தாமலும் இருப்பவர்கள் குறித்தும் கிராமசபை உறுப்பினர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்த்ராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆனந்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குர்ஷித்பேகம், சாரதி, கடலூர் தாசில்தார் ஜெயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவா, தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர்வேலுமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story