72-வது சுதந்திர தின விழா: மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை
72-வது சுதந்திர தின விழாவினையொட்டி மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை,
நாட்டின் 72-வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ராணுவ உடை தொழிற்சாலையில் பொதுமேலாளர் கே.சத்யநாராயணா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயக்கர் பவனில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் சுஷில்குமார் தேசிய கொடி ஏற்றினார். மேலும் கேரள வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக தனிப்பட்ட முறையில் ரூ.1 லட்சம் கொடுப்பதாகவும் அறிவித்தார்.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் அதன் தலைவர் பி.ரவீந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மத்திய தொழில்பாதுகாப்பு படை மற்றும் துறைமுக தீயணைப்பு சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் சிரில் ஜி.ஜார்ஜ், அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கலால்வரித்துறை
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கணக்கு மற்றும் தணிக்கை துறை அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை கணக்காய்வு தலைவர் (பொது மற்றும் சமூகப்பிரிவு தணிக்கை) தேவிகா நாயர் தேசிய கொடியை ஏற்றினார். மூத்த துணை கணக்காய்வு அதிகாரி ஜம்புநாதன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து கடந்த நிதி ஆண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால்வரித்துறை அலுவலகத்தில் அதன் முதன்மை தலைமை கமிஷனர் சி.பி.ராவ் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். ஓ.என்.ஜி.சி. (எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம்) சார்பில் அதன் செயல் இயக்குனர் டி.ராஜேந்திரன் (காவிரி படுகை) எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார்.
மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர், என்.சி.சி. மற்றும் சாரணர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
விழாவில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திருவொற்றியூரை சேர்ந்த திருநங்கைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட மாதா மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.1.20 லட்சம், தனிநபர் சுயதொழில் புரிந்திட 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் என வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் இணைப்பு காசோலையை கமிஷனர் கார்த்திகேயன் வழங்கினார்.
அதேபோல சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி மற்றும் தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவர் எம்.எம்.ஆர்.மதன் தலைமையில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர்.
சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்கள் மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரிகளிலும் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
கலெக்டர் அலுவலகம்
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அதிகாரி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து வெ.அன்புச்செல்வன் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கோ.பிரகாஷ் தேசிய கொடி ஏற்றினார். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் அதன் மேலாண் இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்து சமய அறநிலையத்துறை
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் கமிஷனர் எம்.மாலிக் பெரோஸ் கான் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஆர்.ஜெயா தேசிய கொடி ஏற்றினார்.
சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், அதன் நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விஜயராகவன் தேசிய கொடியை ஏற்றினார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் வருவாய் நிர்வாக கமிஷனர் கே.சத்யகோபால் தேசிய கொடி ஏற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் ஏ.அன்வர் ராஜா எம்.பி. தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தேசிய கொடி ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துறைத்தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
சென்னை ராயப்பேட்டை மற்றும் ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்தில், இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் எம்.கே.பட்டாச்சார்யா தேசிய கொடி ஏற்றினார். இதில் இந்தியன் வங்கியில் பொதுமேலாளர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண் இயக்குனர் ஆர்.சுப்பிரமணியகுமார், சென்னையில் உள்ள மத்திய வங்கி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story