சுதந்திர தின விழாவில் 150 பயனாளிகளுக்கு ரூ.6½ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
கரூரில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் 150 பயனாளிகளுக்கு ரூ.6½ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.
கரூர்,
இந்திய நாட்டின் 72–வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை உள்ளிட்டவற்றை சேர்ந்த மாணவ, மாணவிகளும் மிடுக்கான அணிவகுப்பு நடத்தினர். நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. தேசியக்கொடி நிறத்திலான பலு£ன்களும் வானத்தில் பறக்க விடப்பட்டன.
அதனைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கலெக்டர் அன்பழகன் கவுரவம் செய்தார். இதையடுத்து முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் திருமண உதவித்தொகைக்கான கா£சலையையும்., வருவாய்த் துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் திருமண உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட 38 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 15 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களையும் கலெக்டர் வழங்கினார்.
முதல்–அமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் திருமண உதவித்தொகையும், 24 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 500 இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையும், 8 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் விபத்து நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையையும் வழங்கினார். மொத்தம் 150 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 61 லட்சத்து 38 ஆயிரத்து 958 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசுத் துறை அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உடன் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து கரூர் அரசு இசைப்பள்ளி, காந்திகிராமம் லாட்ஸ் பார்க் மேல்நிலைப்பள்ளி, மண்மங்கலம் சரஸ்வதி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புன்னம்சத்திரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம் விஜயலெட்சுமி வித்யாலயா பன்னாட்டு பள்ளி, தாந்தோணிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம் புனித தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளி, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தான்தோன்றிமலை அன்பாலயம் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அப்போது சாதி, மதம், மொழி உள்ளிட்டவற்றால் நாம் வேறுபட்டிருந்தாலும் இந்தியன் என்கிற நாட்டுப்பற்று மூலம் அனைவரும் ஒற்றுமையுணர்வோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பல்வேறு மாநிலங்களில் உள்ள நாட்டுப்புற நடனங்கள், இந்திய தேசியக்கொடியிலுள்ள நிறங்களை உணர்த்தும் கருத்துகள், பாரத மாதாவுக்கு மரியாதை செலுத்துவது உள்ளிட்ட நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. சில மாணவிகள் தூய்மை இந்தியாவை வலியுறுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்குவது ஒவ்வொருவரின் கடமை என நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தமிழர் வாழ்வியல், மொழியின் சிறப்பு மற்றும் இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் நடந்த கலைநிகழ்ச்சிகள் காண்போரை பரவசப்படுத்தின. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத்(குளித்தலை), ஆதிதிராவிடர் நல அதிகாரி பாலசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி குமரேசன், நகராட்சி ஆணையர் அசோக்குமார்(கரூர்), சையத் முஸ்தபா கமாலுதீன்(குளித்தலை), மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி சாந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன், முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.