சாத்தான்குளம் அருகே பெண் அடித்துக் கொலை


சாத்தான்குளம் அருகே பெண் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 16 Aug 2018 4:08 AM IST (Updated: 16 Aug 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம், 


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் உதயம் நகரைச் சேர்ந்தவர் ஜான் கென்னடி (வயது 58) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (54). இவர்களுக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர்.

மூத்த மகள் சோனியாவுக்கும் (21), சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பைச் சேர்ந்த மோகன் மோசசுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மோகன் மோசஸ், கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள கடலைமிட்டாய் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். திருமணத்துக்கு பின்னர் சோனியா தன்னுடைய கணவரின் வீட்டில் வசித்தார்.
இந்த நிலையில் சோனியாவுக்கும், மோகன் மோசசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சோனியா தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, பெற்றோரின் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதற்கிடையே ஜான் கென்னடி அடிக்கடி தன்னுடைய மகள் சோனியாவிடம், கணவரின் வீட்டில் சென்று வாழுமாறு கூறினார். மேலும் அவர் தன்னுடைய மகள் சோனியா, கணவரின் வீட்டுக்கு வாழ செல்லாததற்கு தன்னுடைய மனைவி மல்லிகாதான் காரணம் என்று கூறி, அவரிடம் தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஜான் கென்னடி தன்னுடைய மனைவி மல்லிகாவிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த ஜான் கென்னடி வீட்டில் கிடந்த உருட்டு கட்டையால் மல்லிகாவின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்த மல்லிகா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த பிள்ளைகள் அழுது துடித்தனர். உடனே ஜான் கென்னடி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பதுங்கி இருந்த ஜான் கென்னடியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story