குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணி சாவு
குற்றாலம் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. புலியருவியில் தடையை மீறி குளித்த சுற்றுலா பயணி வெள்ளத்தில் சிக்கி பலியானார்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி அதன் முன்புறம் உள்ள பாலம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஐந்தருவியிலும் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டியது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை நீடித்தது. புலியருவியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் அங்கும் நேற்று காலை குளிக்க தடை விதிக்கப்பட்டது. சிற்றருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானோர், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் சிவகாசியில் இருந்து நண்பர்கள் சிலர் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் புலியருவிக்கு குளிக்க சென்றனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அதில் ஒருவர் அருவி வெள்ளத்தில் சிக்கி வெளியே வர முடியாமல் உள்ளேயே இருந்து விட்டார்.
அவருடன் வந்தவர்கள் அவரை தேடினர். பின்னர் அவரை பிணமாக அருவியில் இருந்து மீட்டனர். இதுகுறித்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் சிவகாசி நாராயணம்மாள்புரத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் பிரபு (வயது 39) என்று தெரியவந்தது. அருவி வெள்ளத்தில் சிக்கி சுற்றுலா பயணி ஒருவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story