தினம் ஒரு தகவல் : கல் நண்டு மகத்துவம்


தினம் ஒரு தகவல் : கல் நண்டு மகத்துவம்
x
தினத்தந்தி 16 Aug 2018 5:16 AM GMT (Updated: 16 Aug 2018 5:16 AM GMT)

கடல் மற்றும் ஏரி நண்டுகளைக் காட்டிலும் கல் நண்டு மகத்துவமானது. மருத்துவ குணமும் கொண்டது.

பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படும் கல் நண்டின் சிறப்பம்சங்களை காண்போம்.

கல் நண்டு என்று சொல்லப்படும் சதுப்பு நில நண்டுகள் உலகளாவிய அளவில் மிகவும் அதிகமாக விரும்பப்படும் இறைச்சி ரகம். மாங்குரோவ் காடுகள் இருக்கும் சதுப்பு நிலங்களில் மட்டுமே இந்த நண்டுகள் வாழும். காரணம் அதற்குரிய இயற்கை பாதுகாப்பினை அக்காடுகள்தான் வழங்குகின்றன.

பொதுவாக பார்த்தால் மற்ற இறைச்சிகளைவிட 2 சதவீதம் அதிக புரதச்சத்து கொண்டது கல் நண்டு. கேரட்டில் இருக்கும் கரோபினாயில் இந்த நண்டில் அதைவிட அதிகம் உள்ளது. தாதுக்கள், இரும்புச்சத்து ஆகிய இரண்டும் மற்ற உணவுகளை காட்டிலும் கல் நண்டில் அதிகம் உள்ளன. வைட்டமின்கள் ஏ, சி, இ, டி1, டி12 ஆகியன இதில் உள்ளன.

அமெரிக்காவுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் இந்தநண்டை கால்சியம் அதிக அளவில் இருப்பதாக கூறி அமெரிக்கர்கள் சூப் வைத்து சாப்பிடுகின்றனர். தாய்லாந்திலோ நண்டின் முட்டைகளை எடுத்து வினிகரில் போட்டு வைத்து தினந்தோறும் காலையில் உண்கின்றனர். இதனால் தோல் மற்றும் முகப்பொலிவு கூடுகிறதாம். பெரு நாட்டில் கல் நண்டுக்கு ஏககிராக்கி. காரணம் இல்லற இன்பத்தை இது தூண்டுவதாக அங்கு கருதப்படுகிறது.

மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தலை, சதைப்பகுதி, கால்கள் ஆகியவை தனித்தனியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டில் 1 கிலோ எடையுள்ள நண்டுகள் விரும்பப்பட்டாலும், வெளிநாடுகளில் 500 கிராம் வரை எடையுள்ள நண்டு களைத்தான் விரும்புகின்றனர். பொதுவாக மாங்குரோவ் மருத்துவ குணங்கள் கொண்டதுதான் என்றாலும் அவை இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் பயோ பெர்டிலைசர் என்னும் உரத் தயாரிப்புக்கு இது பயன் படுத்தப்படுகிறது. ஆனால் மாங்குரோவ் காடுகளின் பொதுப்பலன் என்றால் அது சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை தடுப்பதுதான். பொங்கி வரும் அலையை தடுத்து நிறுத்துவதால் இது அலையாத்தி காடுகள் என்றுதான் மக்களால் அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பை உணர்ந்துதான் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தல விருட்சமாக மாங்குரோவ் வகையான கிள்ளை மரம் உள்ளது. 

Next Story