கரூர் அருகே கரையோர பகுதி வீடுகளுக்குள் காவிரி வெள்ளம் புகுந்தது


கரூர் அருகே கரையோர பகுதி வீடுகளுக்குள் காவிரி வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 17 Aug 2018 4:30 AM IST (Updated: 17 Aug 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே கரையோர பகுதி வீடுகளுக்குள் காவிரி வெள்ளம் புகுந்ததால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பள்ளி, சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நொய்யல்,

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1½ லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. அதோடு திருப்பூர் அமராவதி அணையில் இருந்தும், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்தும் வெளியேற்றப்படும் உபரிநீர் காவிரியில் கலந்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளின் கரையோரமாக வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் சீறிப்பாய்ந்தது. நேரம் செல்ல, செல்ல நீர்வரத்து அதிகமானதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளையும் தாண்டி வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் முக்கியமான பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தங்களது வீட்டிலிருந்து வெளியேறினர்.

60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், அவற்றில் வசித்த 200-க்கும் மேற்பட்டோர் தவுட்டுப்பாளையத்திலுள்ள நன்செய் புகளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர். அவர்களுக்கு வாங்கல் வட்டார மருத்துவ அலுவலர் சுகமதி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். மேலும் காவிரி ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக்கூடாது என தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே வெள்ளநீர் சூழ்ந்த வீடுகளில் மின்கசிவினால் விபத்து ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் வெள்ளநீர் புகுவது அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் அங்குள்ள தாழ்வான பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், அங்கு குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு என நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார், மாவட்ட கலெக்டர் அன்பழகன் உள்பட அதிகாரிகள் தவுட்டுப்பாளையத்திற்கு சென்று வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் வீதிகளில் தேங்கி நின்ற நீரில் இறங்கி, நடந்து சென்று வீடுகளுக்கு சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா?, குடியிருப்பில் இருந்து வெளியேறிய மக்களுக்கு வேறு ஏதும் பாதிப்பு இருக்கிறதா? என்பன உள்ளிட்டவற்றை பற்றி விசாரித்தனர். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பரமேஸ்வரன், செல்வி, வட்டாட்சியர் கற்பகம், மாவட்ட அவைதலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், கரூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி உள்பட தி.மு.க.வினர் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற் பட்டது. பின்னர் அவர்கள், பாராளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து, உபரிநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க புகளூரில் கதவணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே பாசன வாய்க்கால்களில் ஆற்றுநீரை திறந்து விட்டு, பயிர் சாகுபடிக்கு உதவி புரிய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த சமுதாயக்கூடம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு போதிய அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து தரப்பட்டுள்ளதா? என பாராளுமன்ற துணை சபாநாயகர், அமைச்சர் உள்பட அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது, வெள்ளநீர் வடியும் வரை உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம், என்று ஆறுதல் கூறினர். முன்னதாக திருமுக்கூடலூர், மல்லம்பாளையம் பகுதிகளிலும் வெள்ளபாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கரூர் அமராவதி ஆற்றில் சமீபத்தில் இதுவரை இல்லாத வகையில் இருகரைகளையும் தொட்டபடி உபரிநீர் செல்கிறது. அமராவதி ஆறானது கரூர் அருகே திருமுக்கூடலூர் காவிரி ஆற்றில் கலக்கிறது. அந்த இடத்தில் நீர்வரத்து அதிகரித்ததால், கரைகளை உடைத்து கொண்டு வெளியேறி அங்குள்ள வயல்வெளிக்குள் வெள்ள நீர் பாய்ந்தது. இதனால் திருமுக்கூடலூர், அரங்கநாதன்பேட்டை, என்.புதுப்பாளையம், அச்சமாபுரம், சோமூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, கரும்பு, தென்னை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்ததாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு உரிய நிவாரணம் வழங்கினால் தான் நஷ்டத்தை ஈடு செய்ய முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

உபரிநீரை தேக்கி வைக்க ஆங்காங்கே தடுப்பணை கட்டியிருந்தால் இந்த நீர் வீணாவது தடுக்கப்பட்டிருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் விவசாய கிணறுகள், தண்ணீரை வெளியேற்றும் மின்மோட்டார்கள் ஆகியவை நீரில் மூழ்கி உள்ளன. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க வயல்வெளிகளுக்குள் நீர்வடியும் வரை யாரும் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல் நெரூர் காவிரி ஆற்று நீரேற்று நிலையம் அருகேயும் தண்ணீர் அதிகப்படியாக சென்றதால் நீரை குழாய் மூலம் கொண்டு செல்வதில் தொய்வு ஏற்பட்டது. மேலும் வாங்கல், நெரூர் காவிரி ஆற்று பகுதிகளில் புதைகுழிகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டதால் அங்கு யாரும் குளிக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது.

Next Story