முத்துநகர் கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க புதிய எந்திரம்


முத்துநகர் கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க புதிய எந்திரம்
x
தினத்தந்தி 17 Aug 2018 3:00 AM IST (Updated: 17 Aug 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க புதிய எந்திரத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 


தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ரிவர்ஸ் வெண்டிங் எந்திரம் என்னும் நவீன எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தில் கழிவு பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால், அதற்கு பதிலாக, இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ள நிறுவனங்களின் தள்ளுபடி கூப்பன் எந்திரத்தில் இருந்து வெளிவரும். அதன் மூலம் மக்கள் பயன்பெறலாம்.

இந்த எந்திரம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு நவீன எந்திரத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்பிக் நிறுவன பங்களிப்புடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ரிவர்ஸ் வெண்டிங் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் கழிவு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை போட்டால் அவை உள்ளேயே நெருக்கப்பட்டு சேமிக்கப்படும். மேலும் பாட்டில்களை போடுபவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ள தனியார் நிறுவனங்களில் தள்ளுபடி பரிசு கூப்பன்களை எந்திரம் வழங்கும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை இந்த எந்திரத்தில் போட்டு கூப்பன்களை பெற்று கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் சூப்பர் மார்க்கெட், ஓட்டல் உள்ளிட்ட 7 நிறுவனங்களின் தள்ளுபடி கூப்பண் வழங்கப்படுகிறது. இதே போன்ற எந்திரம் பஸ் நிலையம் பகுதியிலும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரெயில்வே துறை மூலம் ரெயில் நிலையங்களில் இந்த எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, துணை ஆட்சியர்(பயிற்சி) லாவண்யா, ஸ்பிக் நிறுவன நிர்வாக மேலாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story