கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Aug 2018 4:15 AM IST (Updated: 17 Aug 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

தனியார் வங்கியில் ரூ.50 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அடையாறு,

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 55). தொழில் அதிபரான இவர் பால் கம்பெனி நடத்தி வருகிறார். அவரை, காந்திலால் உள்ளிட்ட 3 பேர் அணுகி தங்களுக்கு தனியார் வங்கியில் உயரதிகாரிகளிடம் நல்ல பழக்கம் உள்ளதாகவும், அதனால் சுலபமாக கடன் பெற்று தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி அதற்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக தரவேண்டும் என்றனர்.

அதை நம்பிய மோகனசுந்தரம், தனக்கு ரூ.50 கோடி கடன் பெற்று தரும்படி கூறியுள்ளார். இதையடுத்து மோகனசுந்தரத்திடம் அவர்கள் சில ஆவணங்களை வாங்கினர்.

பணத்துடன் தப்பினர்

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் மோகனசுந்தரத்தை தொடர்பு கொண்ட அவர்கள் கடன் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் கிடைத்து விட்டதாகவும், தங்களுக்கு கமிஷன் ரூ.1 கோடியை தந்தால் ரூ.50 கோடி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் கூறினர். இதையடுத்து ரூ.1 கோடியை எடுத்துக்கொண்டு தனது சகோதரருடன் ஈரோட்டில் இருந்து தனது காரில் சென்னை கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் மோகனசுந்தரம் அறை எடுத்து தங்கினார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு பணத்துடன் வருமாறு 3 பேரும் கூறியுள்ளனர். அங்குள்ள வரவேற்பறையில் 3 பேருடன் பேசிக்கொண்டிருந்த மோகனசுந்தரம் பணம் இருந்த பையை வைத்து விட்டு கழிவறை சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது 3 பேரும் பணத்துடன் தப்பி விட்டனர். அவர்களின் செல்போனை தொடர்பு கொண்ட போது அது ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

போலீஸ் விசாரணை

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகனசுந்தரம் இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே போலீஸ் விசாரணையில் மோகனசுந்தரம் சில தகவல்களை முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்ததாக கூறப்படுகிறது, இதனால் உண்மையிலேயே ரூ.1 கோடி மோசடி நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story