பரங்கிமலையில் காரை வழிமறித்து குதிரை பந்தய தரகரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது
பரங்கிமலையில், காரை வழிமறித்து கத்திமுனையில் குதிரை பந்தய தரகரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பரங்கிமலை பட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஜ்குமார்(வயது 45). இவர், கிண்டி ரேஸ்கோர்சில் குதிரை பந்தய தரகராக உள்ளார். கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி இவர், கிண்டியில் இருந்து காரில் பட்ரோடுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்டகும்பல், அவரது காரில் மோதுவதுபோல் சென்று வழிமறித்தது. பின்னர் கத்தியைகாட்டி மிரட்டி காரில் இருந்த சூட்கேசை பறித்துக்கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றது.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் மோகன்தாஸ் தலைமையில் பழவந்தாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, பாஸ்கரன், ஏட்டுகள் மகாவீர்், அங்கமுத்து, ஜாபர் ஆகியோர்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள் பதிவு எண்
இந்த தனிப்படை போலீசார், வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் காரை மறித்து வழிப்பறி செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
அதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களை வைத்து, திருவொற்றியூரைச் சேர்ந்த லியோ(வயது 27) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். முதலில் தனக்கும், வழிப்பறிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய லியோ, அதன்பிறகு போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
8 பேர் கைது
அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து வசதியானவர்களை இதுபோல் கத்திமுனையில் மிரட்டி வழிப்பறி செய்து, அந்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்ததாகவும், அதேபோல் குதிரை பந்தய தரகரான ஹரிஜ்குமாரிடம் நிறைய பணம் இருக்கும் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அவரது காரை மறித்து அதில் இருந்த சூட்கேசை பறித்துச்சென்றதாகவும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து லியோ மற்றும் அவரது நண்பர்களான அண்ணாநகரைச் சேர்ந்த லாரன்ஸ்(27), வியாசர்பாடியை சேர்ந்த ரத்னம்(23), ஜெகதீஸ்வரன்(23), அபினேஷ்(23), டெல்லிபாபு(23), பிரகாஷ்(23), சரவணன்(26) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 5 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினார்கள். வழிப்பறி கும்பலை பிடித்த தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story