பாசன வாய்க்கால்களில் தண்ணீர்வரவில்லை: தூர்வாரும் பணி சரியாக நடக்காததால் சம்பா சாகுபடி தொடங்க முடியவில்லை


பாசன வாய்க்கால்களில் தண்ணீர்வரவில்லை: தூர்வாரும் பணி சரியாக நடக்காததால் சம்பா சாகுபடி தொடங்க முடியவில்லை
x
தினத்தந்தி 16 Aug 2018 10:45 PM GMT (Updated: 16 Aug 2018 7:58 PM GMT)

தூர்வாரும் பணி சரியாக நடக்காததால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர்வரவில்லை. இதனால் சம்பா சாகுபடி தொடங்க முடியவில்லை என்று காவிரி உரிமை மீட்புக்குழு குற்றம் சாட்டி உள்ளது.

தஞ்சாவூர்,

காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன், சமவெளி பாதுகாப்பு இயக்க தலைவர் பழனிராஜன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டசெயலாளர் மணிமொழியன், மாவட்ட தலைவர் ஜெகதீசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அகமதுகபீர், ஐ.ஜே.கே. மாவட்ட செயலாளர் சிமியோன்சேவியர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறியதாவது:-

பருவமழை காரணமாக வெள்ளம் காவிரி, கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடுகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை. இதனால் சம்பா சாகுபடி தொடங்க முடியவில்லை. இதற்கு பொதுப்பணித்துறை பொறுப்பு வகிக்கின்ற முதல்-அமைச்சர் தான் பொறுப்பு. தூர்வாரும் பணி, மறுசீரமைப்பு பணி சரியாக செய்யாததால் கோடி, கோடியாக நிதி ஒதுக்கியும் முழுமையாக செய்யாமல் அதில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஓட்டம் தடைபட்டு வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, புது ஆறு ஆகிய அனைத்து ஆறுகளிலும் கிளை வாய்க்கால்களை செப்பனிட்டும் கரைகளை பலப்படுத்த வேண்டும். பாசன ஏரிகளை சீரமைக்க வேண்டும். புதிய ஏரிகளை உருவாக்கவேண்டும். இதற்கான பெரிய திட்டத்தை இப்போதே தொடங்கி அடுத்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்.

இதற்கான வல்லுனர்கள்குழு கொண்ட உண்மை அறியும் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து தமிழக அரசுக்கு மாற்று செயல்திட்டத்தை முன்வைக்க உள்ளோம். முக்கொம்பு முதல் அணைக்கரை வரை 107 கி.மீ. தூரம் ஆகும். இதற்கு இடைப்பட்ட இடத்தில் 7 இடங்களில் கதவணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் உள்ளது. அதை செயல்படுத்த வேண்டும். இதற்காக முக்கொம்பு முதல், கடைமடை பகுதி வரை 3 குழுக்கள் சென்று ஆய்வு செய்து அதற்கான திட்ட அறிக்கையை அரசுக்கு அளிக்க உள்ளோம்.

ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற தமிழக விவசாய சங்கத்தினர் சிலர் கூறுவது தமிழகத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும். எனவே அதனை விவசாய சங்கத்தினர் கைவிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியும் அணைகளை இந்த குழுவினர் களஆய்வு செய்யவில்லை. பிறகு எதற்கு இந்த குழு.

மத்திய அரசு நம்மை ஏமாற்றி விட்டது. அதற்கு தமிழக அரசு துணை போகிறது. எனவே மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவுக்கு முழுநேர அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இப்போது உள்ளவர்களை நீக்கி விட்டு புதிதாக அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, தமிழ்தேசிய பாதுகாப்பு இயக்க தலைவர் வக்கீல் கார்த்திகேயன், தமிழ்தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, மாவட்ட செயலாளர் கவித்துவன், பழ.ராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஜெயினுலாபுதீன், வேதாரண்யம் சிவ.வடிவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story