கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட வாஜ்பாய் அனுமதி அளித்தார் குமரி அனந்தன் பேச்சு


கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட வாஜ்பாய் அனுமதி அளித்தார் குமரி அனந்தன் பேச்சு
x
தினத்தந்தி 17 Aug 2018 4:15 AM IST (Updated: 17 Aug 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட வாஜ்பாய் அனுமதி அளித்தார் என்று, பட்டுக்கோட்டையில் குமரி அனந்தன் கூறினார்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கிராம ஒன்றிய, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் காமராஜர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். சிலை அமைப்பு குழுத்தலைவர் ஆர்.ராமசாமி வரவேற்றார். பண்ணவயல் ஊராட்சி முன்னாள் தலைவர் சு.ராஜாத்தம்பி, தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி மாநில துணைத்தலைவர் ஆர்.கலைச்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.மகேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் யோகானந்தம், அ.வைரக்கண்ணு, எம்.ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் காமராஜர் சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் முதலில் காமராஜர் சிலையை முன்னாள் பிரதமர் நேரு திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில் உயிரோடு இருக்கும் ஒருவரின் சிலையை திறந்து வைக்கக்கூடாது என்பது மரபு. ஆனால் மக்கள் தலைவர் காமராஜரின் சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார். பள்ளிக்கு செல்லாத ஏழைக்குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார்். அந்த திட்டத்தையும் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் தொடங்கினார். பாரதியார் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தவர் காமராஜர். குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்த ராஜாஜி 6 ஆயிரம் பள்ளிகளை மூடினார். இதற்கு காமராஜர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.

நேரு மறைந்த பிறகு யார் பிரதமர் என்ற நிலை வந்த போது காமராஜர் லால்பகதூர் சாஸ்திரியை தேர்ந்தெடுத்தார். பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட மொரார்ஜி தேசாய் நீங்கள்(காமராஜர்) பிரதமர் பதவிக்கு போட்டியிட்டால் நான் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் காமராஜர் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று கூறிவிட்டார். அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த ராஜாஜி இதை அறிந்து நேரடியாக காமராஜர் வீட்டுக்கு வந்து லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக தேர்ந்தெடுத்து இந்த தேசத்தை காப்பாற்றி விட்டாய் என்று பாராட்டினார்.

காமராஜர் கடைசியாக கலந்து கொண்ட விழா சிவாஜிகணேசன் பிறந்தநாள் விழா. மறு நாள் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்த நாளில் காமராஜர் மறைந்தார். காமராஜர் சாம்பலை முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் கரைக்க கொண்டு சென்றோம். அங்கு காந்தி மண்டபத்தில் 3 நாள் சாம்பலை பொது மக்கள் அஞ்சலிக்காக வைத்து கரைக்க ஏற்பாடு செய்தோம்.

காந்தி மண்டபத்திற்கு அருகே அவர் பிறந்த நாளில் மறைந்த காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இந்த கோரிக்கையை அப்போதைய அரசு ஏற்கவில்லை. ஆனால் காமராஜர் இறந்து 25 ஆண்டுக்களுக்கு பிறகு 2000-ம் ஆண்டில் கன்னியாகுமரியில் மக்கள் தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட அப்போதைய பிரதமர் வாஜ்பாய்தான் அனுமதி கொடுத்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பட்டுக்கோட்டையில் காமராஜர் சிலை அமைத்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.

முன்னதாக குமரி அனந்தன், காமராஜருக்கு சிலை அமைக்க தனது சொந்த இடத்தை கொடுத்த தண்டபாணி மற்றும் சிலை அமைப்பு குழுவினருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன், தஞ்சை மாநகர காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், திருவோணம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் டி.எஸ்.ராஜேந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவா மற்றும் பலர் பேசினர். முடிவில் ராஜு நன்றி கூறினார். 

Next Story