45 கிராமங்கள்-6 நகர பஞ்சாயத்துகளை உள்ளடக்கி ஏரல் புதிய தாலுகா உதயம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 45 கிராமங்கள், 6 நகர பஞ்சாயத்துக்களை உள்ளடக்கி ஏரலில் புதிய தாலுகா அலுவலகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3-வது பெரிய வணிக நகரமாக விளங்கும் ஏரலை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், ஏரலை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா தொடங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து ஏரல் பஸ் நிலையம் அருகில் முக்காணி ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் மாடியில் புதிய தாலுகா அலுவலகம் அமைக் கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் புதிய தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் ஏரலில் நடந்த விழாவில் சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.
அவர் பேசும்போது கூறியதாவது:-
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஆறுமுகமங்கலம், பெருங்குளம், ஆழ்வார்திருநகரி ஆகிய குறுவட்டங்களில் இருந்து 45 கிராமங்களை சேர்த்தும், ஏரல், பெருங்குளம், சாயர்புரம், நாசரேத், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி ஆகிய 6 நகர பஞ்சாயத்துகளை உள்ளடக்கியும், ஏரலை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா தொடங்கப்பட்டு உள்ளது.
ஏரலில் விவசாயமும், வணிகமும் சிறந்து விளங்குகிறது. இங்கு சுற்று வட்டார பகுதி மக்கள் எளிதில் வந்து செல்ல முடியும். ஏரலில் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் நல்ல இடத்தை தேர்வு செய்து, புதிய தாலுகா அலுவலகம் கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், கலால் துறை உதவி ஆணையர் சுகுமாறன், தாசில்தார்கள் மலர்தேவன் (ஏரல்), தில்லைப்பாண்டி (திருச்செந்தூர்), சந்திரன் (ஸ்ரீவைகுண்டம்), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முத்துராமலிங்கம், மண்டல துணை தாசில்தார் சேகர்,
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் தசரத பாண்டியன், துணை தலைவர் தர்மராஜ், பொருளாளர் வில்சன் வெள்ளையா, முஸ்லிம் வணிகர் நலச்சங்க தலைவர் பாக்கர் அலி, முன்னாள் யூனியன் தலைவர் ஆறுமுகநயினார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மும்பை குமரேசன், வாழவல்லான் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story