திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 17 Aug 2018 5:00 AM IST (Updated: 17 Aug 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு ரூ.10 லட்சம் மோசடி செய்த புனேவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ஒருவருக்கும், மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சசிகாந்த் சிவாஜி(வயது 38) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறி, கடந்த 2½ ஆண்டுகளாக இருவரும் முகநூல் மூலம் காதலித்து வந்ததாக தெரிகிறது.

பின்னர் இருவரும் நேரில் சந்திக்க முடிவுசெய்து கோவாவில் சந்தித்தனர். அப்போது சசிகாந்த் சிவாஜி அந்த பெண்ணிடம், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, தனது ஆசைக்கு இணங்க செய்தார். அதன்பின்னரும் பலமுறை இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

ரூ.10 லட்சம் மோசடி

பின்னர் சசிகாந்த் சிவாஜி, தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்று கூறி அந்த பெண்ணிடம் இருந்து ரூ.10 லட்சத்தை பெற்றுக்கொண்டு சென்றார். அதன்பிறகு அவர் அந்த பெண்ணுடன் தொடர்புகொள்ளவில்லை. முகநூல் தொடர்பையும் துண்டித்துவிட்டார். இதனால் அந்த பெண் புனேவுக்கு சென்று சசிகாந்த் சிவாஜி பற்றி விசாரித்தார்.

அதில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகே அந்த பெண்ணுக்கு தான் ஏமாற்றப்பட்டதும், தன்னிடம் இருந்து ரூ.10 லட்சத்தை வாங்கி சசிகாந்த் சிவாஜி மோசடி செய்துவிட்டதும் தெரிந்தது.

கைது

இதுதொடர்பாக அந்த பெண் நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி ஆகியோர் உத்தரவின்பேரில் பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் மோகன்தாஸ் தலைமையில் நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், ஏட்டுகள் பாலாஜி, அல்போனஸ், மகேஸ்வரன், தினகரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் புனேவுக்கு சென்று சசிகாந்த் சிவாஜியை கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்தனர். அவர் இதுபோன்று சமூகவலைத்தளம் மூலம் வேறு பெண்களுடன் தொடர்புவைத்து மோசடி செய்துள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story