‘பாரத ரத்னா விருதுக்கு பெருமை சேர்த்தவர்’ வாஜ்பாய்க்கு ரங்கசாமி புகழாரம்


‘பாரத ரத்னா விருதுக்கு பெருமை சேர்த்தவர்’ வாஜ்பாய்க்கு ரங்கசாமி புகழாரம்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:30 AM IST (Updated: 17 Aug 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

’பாரத ரத்னா விருதுக்கு பெருமை சேர்த்தவர்’ என வாஜ்பாய்க்கு முன்னாள் முதல் அமைச்சர் ரங்கசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

புதுச்சேரி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

இந்திய நாட்டின் முது பெரும் அரசியல் தலைவரும், பாரத ரத்னா விருதுக்கு பெருமை சேர்த்தவரும், முன்னாள் பாரத பிரதமருமான வாஜ்பாய் மறைவு கேட்டு துயரம் அடைந்தேன். சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு நாட்டின் விடுதலைக்காக பாடுப்பட்ட தலைவர்களில் அவரும் ஒருவர். முதன் முதலாக இந்திய நாட்டில் பாரதீய ஜனதா கட்சியை பாராளுமன்றத்தில் ஆட்சியில் அமரவைத்து அதன் தலைமையை ஏற்று பிரதமராக செயல்பட்ட பண்பாளர். நாடாளுமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். அவரது ஆட்சி காலத்தில் இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்ற பெருமைக்குரியவர். மேலும் நாவன்மைமிக்க பேச்சாளர். கவிஞர், எழுத்தாளர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர்.

கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரிடத்திலும் அன்பாகவும், நட்பாகவும் பழகக்கூடிய மிகச்சிறந்த தலைவரை இந்திய திருநாடு இழந்துள்ளது. அவரது மறைவு இந்திய நாட்டிற்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் ஓர் மிகப்பெரிய இழப்பாகும். அவருடைய மறைவுக்கு அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இந்திய தேசத்தின் மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் 3 முறை பிரதமாகவும் இருந்துள்ளார். அவர் வகித்த பதவிகளுக்கு பெறுமை சேர்த்தவர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தங்க நாற்கர சாலை திட்டம் மூலமாக கிராமங்களையும், நகரங்களுடன் இணைத்து பொருளாதாரத்தை உயர செய்தவர். நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிதும்பாடுபட்டவர். அணுகுண்டு சோதனைகளை நடத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர். அரசியலில் அவருடைய பங்களிப்பும், சக மனிதரை மதித்து அன்பு செலுத்தும் பண்பும் அனைவரையும் கவர்ந்தது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், பா.ஜனதா தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:-

இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி எடுத்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களாலும் அடல்ஜி என்று அன்புடன் அழைக்கப்பட்டார். அவருடைய இழப்பு பாரத நாட்டையே மீளா துயரில் ஆழ்த்தி உள்ளது. அன்னாரது ஆன்மா அமைதியுடன் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story