அ.தி.மு.க.- அ.ம.மு.க. மோதல் பொருட்கள் சூறை; வாக்குப்பதிவு ரத்து
நெல்லை மேலப்பாளையம் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க., அ.ம.மு.க. இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வாக்குச்சாவடி அலுவலகத்தில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. இதையடுத்து வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லை மேலப்பாளையம் நகர கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தல் ஏற்கனவே நடந்தது. மொத்தம் 11 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் 3 பேர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தலின்போது வாக்காளர் பெயர் விடுபட்டு இருப்பதாக அ.தி.மு.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 32 கூட்டுறவு சங்கங்களுக்கு நேற்று தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
மேலப்பாளையம் நகர கூட்டுறவு சங்கத்துக்கு நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அங்குள்ள 8 உறுப்பினர் பதவிக்கு 30 பேர் போட்டியிட்டனர். அ.தி.மு.க., தி.மு.க.. அ.ம.மு.க ஆகியோர் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் எங்களுக்கு முறையாக தேர்தல் தொடர்பான தகவல் தெரிவிக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை ஏன் சேர்க்கவில்லை? என்று கூறினர். இதனால் அதிகாரிகளுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த அ.ம.மு.க.வினர் அங்கு வந்தனர். அவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், ஓட்டுப்பெட்டிகள் சூறையாடப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நகராஜன் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஹையாத், பாளையங்கோட்டை பகுதி செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் கணேசன், பொருளாளர் பால்கண்ணன், இணை செயலாளர் எம்.சி.ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர். அதேபோல் தி.மு.க. வேட்பாளர் சாகுல் அமீது தலைமையில் நிர்வாகிகள் அங்கு வந்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் தேர்தல் முறையான நடக்கவில்லை, தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். தி.மு.க.வை சேர்ந்தவர்களும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். தேர்தலை நடத்த வேண்டும், ஒத்திவைக்கக்கூடாது என அ.ம.மு.க.வினர் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். இதுகுறித்து அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் கூறும்போது, “மேலப்பாளையம் நகர கூட்டுறவு கங்க தேர்தல் தொடங்கும் போது, அங்கு அ.தி.மு.க.வினர் வந்தனர். அவர்கள், மேஜை, நாற்காலி, ஓட்டுப்பெட்டிகளை சேதப்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தேர்தலை நிறுத்தக்கூடாது, கூட்டுறவு சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்“ என்று கூறினார்.
இதற்கிடையில் மேலப்பாளையம் நகர கூட்டுறவு வங்கி தேர்தலின் வாக்குப்பதிவை ரத்து செய்து தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதற்கான அறிவிப்பு நோட்டீசு வங்கி அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டது. அதில், “சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் மேலப்பாளையம் நகர கூட்டுறவு வங்கி வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story