ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சிறைபிடிப்பு
கேளம்பாக்கம் அருகே ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக 100-க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த வெளிச்சை ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் பரப்பில், பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாக கூறி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதனால் விவசாயம் நிலம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும் லாரிகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதிக அளவில் மண் எடுப்பதற்கு தடை உத்தரவு வாங்கினர்.
சிறைபிடிப்பு
இந்நிலையில் கோர்ட்டு உத்தரவை மீறி அளவுக்கு அதிகமாக தொடர்ந்து மண் எடுத்து வந்ததால் 100-க்கும் மேற்பட்ட லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் நேற்று சிறைபிடித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் 9 பொக்லைன் எந்திரங்கள், 100-க்கும் மேற்பட்ட லாரிகளை அப்பகுதியில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story