உப்பூர் அனல்மின் நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க கிராம சபையில் கோரிக்கை


உப்பூர் அனல்மின் நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க கிராம சபையில் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2018 4:15 AM IST (Updated: 17 Aug 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

கிராம சபை கூட்டத்தில் உப்பூர் அனல் மின் நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரியை அவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் காவனூர் ஊராட்சி அடர்ந்தனார்கோட்டை கிராமத்தில் சுதந்திரதினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசுந்தரி தலைமை தாங்கினார். இதில் அடர்ந்தனார்கோட்டை, காவனூர், துத்தியேந்தல், நாகனேந்தல், வளமாவூர், மேலவயல் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஊராட்சிகளின் அடிப்படை தேவைகள் குறித்தும், அரசு நலத்திட்ட பயனாளிகள் தேர்வு குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது உப்பூர் அனல் மின் நிலையத்தால் நாகனேந்தல், வளமாவூர் கிராமங்களில் விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் பாதிக்கப்படுவதால் அந்த திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதற்கு அதிகாரி குணசுந்தரி அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற முடியாது என்று கூறினார். ஆனாலும் ஆர்.எஸ்.மங்கலம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் தனமதிவாணன், திவாகரன், மணிகண்டன், கருணாநிதி ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் தீர்மானத்தை நிறைவேற்றும்படி தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதையடுத்து தனது மேல் அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் தீர்மான நோட்டில் எழுத முடியாது என்று அவர் கூறியதால் பொதுமக்கள் மேல் அதிகாரி வரட்டும் என்று கூறி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசுந்தரியை சிறைபிடித்தனர். தகவல் அறிந்து வந்த யூனியன் மண்டல அதிகாரி கணேசன், யூனியன் பொறியாளர் முத்துகலாதேவி மற்றும் திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபற்றி மனு அளித்தால் கலெக்டரின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.

ஆனால் அதற்கு பொதுமக்கள் ஒப்புக்கொள்ளாமல் உடனடியாக தீர்மான நோட்டில் எழுத வேண்டும் என்று கூறி அதிகாரியிடம் இருந்து தீர்மான நோட்டை பறித்தனர். பின்னர் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் சிறைபிடிக்கப்பட்ட அதிகாரியை மீட்டதுடன், கிராமசபை கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல உப்பூர் கிராமசபை கூட்டத்தில் இதே கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றக்கோரி கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

Next Story