அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது
7 ஆண்டுகளுக்கு பிறகு அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. அப்பகுதிகளில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நெய்க்காரப்பட்டி,
பழனியை அடுத்த சாமிநாதபுரம் பகுதியில் அமராவதி ஆறு அமைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் சமயங்களில் இந்த ஆற்றில் நீர்வரத்து ஏற்படும். அந்தவகையில் கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக அமராவதி அணை நிரம்பியது.
நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால் அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் தற்போது திறந்துவிடப்படுகிறது. இதனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் சாமிநாதபுரம், வன்னியர்வலசு, கடத்தூர், கொக்கரக்கல்வலசு, அலங்கியம், அத்திவலசு உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து அப்பகுதிகளில் தண்டோரா மூலம் வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சாமிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் இன்றும் (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படலாம் என கல்வி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story