தண்ணீர் தொட்டிக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் போராட்டம்
செம்பட்டி அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி தண்ணீர் தொட்டிக்கு மாலை அணிவித்து கிராமமக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் ஆதார், ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளனர்.
செம்பட்டி,
செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டை ஊராட்சி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுமார் 40 குடும்பத்தினர் உள்ளனர். இந்த கிராமத்தில் சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பறை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த பல ஆண்டுகளாக இல்லை.
இந்நிலையில், கடந்த 3 வருடங்களாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. ஒரு குடம் தண்ணீரை ரூ.5-க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, பலமுறை நிலக்கோட்டை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணாபுரம் பெண்கள் உள்பட கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன், கையில் பூமாலையுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் தண்ணீர் தொட்டிக்கு மாலை அணிவித்து, அதன்முன்பு காலிக்குடங்களை வைத்து, அருகில் இறந்தவர்களை அடக்கம் செய்ய இறுதிச்சடங்கு செய்வதுபோல், வாழைப்பழம், பத்தி, சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்தனர். பின்னர் தண்ணீர் வரும் தொட்டி இறந்துவிட்டதாக கூறி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகும், அதிகாரிகள் யாரும் அங்கு வராததால், கிராம மக்கள் அவர்களாகவே கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story