நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்


நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:05 AM IST (Updated: 17 Aug 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

பழனி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி, 


தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதையொட்டி பழனி பஸ் நிலையத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக நகராட்சி அலுவலகம் நோக்கி வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் நகர தலைவர் மாலதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வநாயகம், செயலாளர் நூருல் ஹூதா உள்பட பலர் கண்டன உரையாற்றினர். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தரவில்லை என நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நகராட்சி நிர்வாக அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நகராட்சி அலுவலகம் நோக்கி மீண்டும் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அந்த பகுதியில் இரும்பு தடுப்புகளை வைத்தனர். மாற்றுத்திறனாளிகள் அதனை தள்ளிவிட்டு முன்னேறி செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த தனிதாசில்தார் (சமூக பாதுகாப்பு) லட்சுமி, நகராட்சி பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நகராட்சி பகுதியில் உள்ள அரசு, தனியார் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் சாய்வுதளம் அமைக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். பழனி பஸ் நிலையத்தில் கடை வைக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் மாற்றுத்திறனாளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story