தமிழ் சமூகத்தின் கனவு ஆசிரியர்களின் கையில் இருக்கிறது


தமிழ் சமூகத்தின் கனவு ஆசிரியர்களின் கையில் இருக்கிறது
x
தினத்தந்தி 17 Aug 2018 4:15 AM IST (Updated: 17 Aug 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் சமூகத்தின் கனவு ஆசிரியர்களின் கையில் தான் இருக்கிறது என்று புதிய பாடத்திட்ட கருத்தாய்வு கூட்டத்தில், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் பேசினார்.

திண்டுக்கல், 



தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய பாடத்திட்டம் தொடர்பாக மாவட்ட வாரியாக கருத்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட அளவிலான கருத்தாய்வு கூட்டம், எஸ்.எம்.பி.எம். பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் கலந்து கொண்டு, புதிய பாடத்திட்டம் தொடர்பான கருத்துகளை கேட்டு, பதில் அளித்தார். அப்போது பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் பேசியதாவது:-

தலைவர்களின் பிறந்த தேதி, ஊர், பெற்றோர் பெயர் ஆகியவற்றை கேள்வியாக கேட்கும் வழக்கம் உள்ளது. இது மனப்பாடம் செய்யும் வகையிலேயே அமையும். காமராஜரின் வரலாற்றை படிக்கும் மாணவர்களுக்கு, அவரின் சீரிய திட்டங்கள், நல்லாட்சி, சாதனைகள் பற்றி அறிந்து கொள்வது தான் முக்கியமானது. அந்த வடிவில் தான் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளோம். பாடப்புத்தகம் என்பது ஒரு வழிகாட்டி மட்டுமே. அதில் அனைத்து விஷயங்களையும் திணிக்க முடியாது.

அதேநேரம் பாடப்புத்தகத்தில் இல்லாத செய்திகளை திரட்டி, ஆசிரியர்கள் கற்பிக்கலாம். பாடப்புத்தகத்தில் இருப்பதை விட சிறப்பாக கற்பிக்க வேண்டும். ஆங்கில பாடவேளையில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும். பள்ளிகளில் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட உள்ளது. தமிழ் சமூகத்தின் கனவு ஆசிரியர்களின் கையில் தான் இருக்கிறது. நீட் உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகளில் நமது மாணவர்களை கேலி செய்யும் நிலை உள்ளது. அதை புதிய பாடத்திட்டத்தால் மாற்ற வேண்டும்.

நீட் தேர்வில் 99 சதவீத வினாக்கள் புதிய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. எனவே, புதிய பாடத்திட்டம் நன்றாக இருக் கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான அடிப்படை பகுதி நமது பாடத்திட்டத்தில் இருக்கிறது. தமிழில் தேர்வு எழுதுவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறுஅவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் கேள்வி கேட்க வாய்ப்பு கிடைக்காதவர்கள், புதிய பாடத்திட்டம் தொடர்பான கருத்துகளை எழுதி கொடுக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே பள்ளிக்கல்வி செயலர், உங்களுடைய பெயரை எழுத வேண்டாம். கருத்துகளை மட்டும் எழுதினால் போதும். அப்போது தான் பாடத்திட்டம் குறித்த உண்மையான கருத்தை பதிவு செய்ய முடியும், என்றார். உடனே கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது.

கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் மற்றும் அதிகாரிகள் புதிய பாடத்திட்ட பயிற்சி கருத்தாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

Next Story