இன்று முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


இன்று முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 16 Aug 2018 10:47 PM GMT (Updated: 16 Aug 2018 10:47 PM GMT)

மும்பையில் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் பருவமழை பெய்து வருகிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மும்பை நகரம் வெள்ளக்காடாக மாறியது. குறிப்பாக கடந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து 5 நாட்களாக கொட்டி தீர்த்த பேய் மழை மும்பை பெருநகரம் மட்டுமின்றி தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களை புரட்டி போட்டது. இந்த பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கனமழையின் காரணமாக துயர சம்பவங்களும் நிகழ்ந்தன. ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்தும், மரங்கள் முறிந்து விழுந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

மும்பை பெருநகரத்துக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் அடுத்தடுத்து நிரம்பின. அதன்பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்தது. இடை, இடையே பரவலாக மும்பையில் மழை பெய்த போதிலும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இத்துடன் தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Next Story