செக்கானூரணி, கொட்டாம்பட்டி, நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் கிராமசபை கூட்டம்


செக்கானூரணி, கொட்டாம்பட்டி, நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:34 AM IST (Updated: 17 Aug 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

செக்கானூரணி, கொட்டாம்பட்டி, நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி யூனியனில் உள்ள கொட்டாம்பட்டி, வலைச்சேரிபட்டி, பள்ளபட்டி, கருங்காலக்குடி, தும்பைபட்டி, வஞ்சிநகரம் உள்பட 27 கிராம ஊராட்சிகளில் சுதந்திரதினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூர் ஊராட்சியில் இளைஞர் அமைப்பினர் கிராம சபை கூட்டம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருவதால் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அதிகமானோர் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டத்தில் வருவாய் வரவு செலவு தொடர்பான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- கிராம பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட அனைத்து பெண்கள் சுகாதார வளாகத்தை முறையாக பராமரித்தல். ஊராட்சியில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தும் விதமாக வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பினை மாற்றி மீண்டும் தெருக்குழாய்கள் மட்டுமே இருக்கும் வண்ணம் செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும், பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிப்பது, டாஸ்மாக்கடை திறப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக சிலுபனின் இளைய தலை முறை அமைப்பினர் வழங்கினர்.

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சி சார்பில் கொக்குளம் கிராமம் அய்யனார் கோவிலில் சுதந்திரதினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. திருமங்கலம் துணை தாசில்தார் ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் செக்கானூரணியில் ரெயில் நிலையம் கொண்டு வர வேண்டும்.

ஊராட்சியில் உள்ள அனைத்து ஊர்களின் குப்பைகளை கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இடம் ஒதுக்க வேண்டும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கூடுதல் நீர் பெற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அரசுத்துறை அலுவலர்கள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தை கொக்குளம் ஊராட்சி செயலாளர் காசிமாயன் ஏற்பாடு செய்திருந்தார்.

நாகமலைபுதுக்கோட்டை ஊராட்சி சார்பில் கிராம சபைக்கூட்டம் சமுதாயக்கூடத்தில் நடந்தது. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சோனாபாய் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய உதவி பொறியாளர் அனிதா, பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதில் ஊராட்சி மன்றத்திற்குஉட்பட்ட பகுதிகளில் 25 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள குடிநீர் குழாய்கள் அடிக்கடி சேதமடைவதால் அவற்றை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலர் ரேவதி நன்றி கூறினார்.

Next Story