கர்நாடகத்தில் முதல் முறையாக ராஜ்பவனை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி கவர்னர் வஜூபாய் வாலா பேட்டி


கர்நாடகத்தில் முதல் முறையாக ராஜ்பவனை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி கவர்னர் வஜூபாய் வாலா பேட்டி
x
தினத்தந்தி 17 Aug 2018 5:11 AM IST (Updated: 17 Aug 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் முதல் முறையாக ராஜ்பவனை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்குப்படுவதாக கவர்னர் வஜூபாய் வாலா கூறினார்.

பெங்களூரு,

ராஜ்பவன் கட்டிடம் என்று அழைக்கப்படும் கர்நாடக கவர்னர் மாளிகை பெங்களூரு விதான சவுதா கட்டிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1840-ம் ஆண்டு முதல் 1842-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. இது கப்பன் என்பவரால் கட்டப்பட்டது. மைசூரு மாகாணத்தின் கமிஷனராக கப்பன் நியமிக்கப்பட்டார். அந்த கட்டிடத்தில் அவர் வசித்தார்.

அவர் இந்தியாவை விட்டு சென்றபோது, அந்த கட்டிடத்தை விற்பனை செய்தார். அதன் பிறகு கமிஷனராக வந்தவர் லெவின் பென்தம் போரிங் அதை அரசு பங்களாவாக மாற்றினார். 1881-ம் ஆண்டு மைசூரு மாகாணம் மைசூரு மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கமிஷனர் பதவி கைவிடப்பட்டது. நாடு சுதந்திரம் அடையும் வரை அந்த பங்களா விருந்தினர்கள் தங்கும் இல்லமாக இருந்து வந்தது.

சுதந்திரம் அடைந்த பிறகு அது ‘ராஜ்பிரமுக்‘ என்று அழைக்கப்பட்டது. மைசூரு மகாராஜா மைசூரு மாகாணத்தின் முதல் கவர்னராக(ராஜ்பிரமுக்) நியமிக்கப்பட்டார். ஆனால் மைசூரு மகாராஜா அங்கு தங்காமல் பெங்களூருவில் தனக்கென்று ஒரு அரண்மனையை கட்டிக்கொண்டு அதில் வசித்தார். இதனால் அந்த கவர்னர் மாளிகை மத்திய அரசின் விருந்தினர் இல்லமாக மாற்றப்பட் டது.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி முக்கிய பிரமுகர்களுக்கு கவர்னர் மாளிகையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நடைமுறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், பிற மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கவர்னர் மாளிகையில் தங்க வசதிகள் உள்ளன.

இதனால் கர்நாடக கவர்னர் மாளிகை பாரம்பரிய கட்டிடமாக திகழ்கிறது. கவர்னர் மாளிகைக்குள் மிக முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. புதிய அரசு பதவி ஏற்பு விழா, நீதிபதிகள் பதவி ஏற்பு விழா மற்றும் சில முக்கிய விழாக்கள் மட்டுமே கவர்னர் மாளிகைக்குள் நடக்கிறது. பொதுமக்கள் சாலையில் செல்லும்போது கவர்னர் மாளிகை கட்டிடத்தை வெளியில் இருந்து மட்டுமே பார்க்கிறார்கள். உள்ளே சென்று மாளிகையை பார்வையிட தங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என்ற ஏக்கம் பொதுமக்கள் மத்தியில் உண்டு.

பொதுமக்களின் அந்த ஏக்கத்தை நிறைவேற்றும் வகையில் சுதந்திர தினத்தையொட்டி முதல் முறையாக கவர்னர் மாளிகையை பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. பொதுமக்களை பார்வையிட அனுமதிப்பது நேற்று முதல் இது தொடங்கியுள்ளது.

பொதுமக்களை அனுமதிப்பது குறித்து கவர்னர் வஜூபாய் வாலா பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர தினத்தையொட்டி கர்நாடகத்தில் முதல் முறையாக கவர்னர் மாளிகையை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த அனுமதி வழங்குவது இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்கப்படுகிறது. வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தினமும் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் பொதுமக்களை அனுமதிக்கும் நாட்கள் நீட்டிக்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கவர்னர் மாளிகையை பார்க்கலாம். அனுமதி இலவசம். www.rajbhavan.kar.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். குழுக்களாக பிரித்து அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு விவரங்களை சொல்ல வழிகாட்டி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கவர்னர் வஜூபாய் வாலா கூறினார்.

Next Story