மாவட்ட அளவில் மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்
மாவட்ட அளவில் ‘இளம் படைப்பாளர் விருது’ தேர்வுக்காக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்த கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
வேலூர்,
பள்ளி கல்வித்துறை சார்பில் ‘இளம் படைப்பாளர் விருது’ தேர்வுக்காக பள்ளி மாணவர்களுக்கு கடந்த 9-ந் தேதி வேலூர், அரக்கோணம், வாணியம்பாடி, ஆற்காடு, குடியாத்தம், திருப்பத்தூர், வாலாஜா ஆகிய 7 இடங்களில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடந்தது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் ஒரு பிரிவாகவும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதற்கட்டமாக 84 மாணவ-மாணவிகள் தேர்வு பெற்றனர்.
அவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை. பேச்சுப் போட்டிகள் வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட மைய நூலகர் ரவி, கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ராமன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். ‘வாசித்தேன், உயர்ந்தேன்’ என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், ‘என் எதிர்காலம், என் கையில்’ என்ற தலைப்பில் கவிதை போட்டியும், ‘வாழ்விற்கு உயர்வு தருவது வாசிப்பே’ என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடந்தது.
ஒவ்வொரு போட்டியிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது என்று நூலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story