நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.200 கோடி ஒதுக்கீடு குமாரசாமி அறிவிப்பு


நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.200 கோடி ஒதுக்கீடு குமாரசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2018 5:22 AM IST (Updated: 17 Aug 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

குடகு உள்பட மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என்று குமாரசாமி அறிவித்தார்.

பெங்களூரு,

குடகு உள்பட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை பாதிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடகு, உடுப்பி, தட்சிண கன்னடா, சிவமொக்கா, சிக்கமகளூரு, கார்வார், ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து 2 நாட்களில் அறிக்கை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குடகு மாவட்டத்தில் இயல்பை விட 175 சதவீதமும், உடுப்பியில் 62 சதவீதமும், சிவமொக்காவில் 117 சதவீதமும், சிக்கமகளூருவில் 170 சதவீதமும், ஹாசனில் 130 சதவீதமும், கார்வார் மாவட்டத்தில் 81 சதவீதமும் மழை பெய்துள்ளது. இந்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.200 கோடி ஒதுக்கப்படும்.

அந்த மாவட்டங்களின் பொறுப்பு மந்திரிகள் அங்கேயே தங்கி மழை நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 29 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. 1,755 பேருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1,022 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நிலச்சரிவு காரணமாக சிராடி வனம்-சம்பங்கி வன ரோடு, குசால்நகர்-ஹாசன் ரோடு, பாகமங்களா-அய்யங்கேரி ரோடு ஆகிய ரோடுகள் மூடப்பட்டுள்ளன.

குடகு மாவட்டத்தில் மக்களை பாதுகாப்பாக மீட்க ராணுவ உதவி கேட்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்கள். மோசமான வானிலை காரணமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளை(அதாவது இன்று) காலை மீண்டும் அவர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும். இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் 30 பேர் கொண்ட இயற்கை பேரிடர் மீட்பு குழு பெங்களூருவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு மத்திய அரசிடம் மனு வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அந்த உதவி மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். கலெக்டர்களின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.237 கோடி இருப்பு உள்ளது. அதனால் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இந்த பேட்டியின்போது மந்திரிகள் கிருஷ்ண பைரேகவுடா, ஆர்.வி.தேஷ்பாண்டே, யு.டி.காதர், சா.ரா.மகேஷ், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story