மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் தீவானது குடகு: தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலி; வெள்ளத்தில் சிக்கிய 5 பேரின் கதி என்ன? + "||" + The island is continuously raining 7 children, including mothers and daughters What is the fate of 5 dead people?

தொடர் மழையால் தீவானது குடகு: தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலி; வெள்ளத்தில் சிக்கிய 5 பேரின் கதி என்ன?

தொடர் மழையால் தீவானது குடகு: தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலி; வெள்ளத்தில் சிக்கிய 5 பேரின் கதி என்ன?
தொடர் கனமழையால் குடகு மாவட்டம் தீவு போல் காட்சி அளிக்கிறது. கர்நாடகத்தில் இதுவரை மழைக்கு தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கி தவிக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 5 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
குடகு,

கர்நாடக-கேரளா எல்லையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. மலைநாடு மாவட்டங்களில் குடகும் ஒன்று. இந்த மாவட்டத்தின் பாகமண்டலா தலைக்காவிரி என்ற இடத்தில் தான் காவிரி நதி உற்பத்தி ஆகிறது. அதுபோல் ஏராளமான சுற்றுலா தலங்களையும் குடகு மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தகைய பிரசித்தி பெற்ற குடகு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை குடகு மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. அவ்வப்போது கொட்டி தீர்த்து வந்த கனமழை கடந்த ஒருவாரமாக இடைவிடாது ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


அதுபோல் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த மழை நீரும் குடகு வழியாக காவிரியில் கலக்கிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக குடகு மாவட்டம் மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக குடகில் நீடித்து வந்த கனமழை நேற்றும் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

குறிப்பாக மடிகேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை ஆகிய 3 தாலுகாக்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டு ஓடி வருகிறது. தொடர் மழையால் மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மடிகேரி-சம்பாஜே ரோடு, மடிகேரி-மாதாபுரா ரோடு, குசால்நகர்-ஹாசன் ரோடு உள்பட மாவட்டம் முழுவதும் முக்கியமான பல சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் போக்குவரத்து முடங்கியது. அத்துடன் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சில தரைமட்ட பாலங்கள், சிறிய பாலங்களையும் தண்ணீர் மூழ்கடித்து செல்வதை காண முடிகிறது. குறிப்பாக குசால்நகர் அருகே கூடிகே பகுதியில் குடகு-ஹாசன் ரோட்டில் உள்ள பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

தொடர்ந்து கொட்டி தீர்த்துவரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் தாண்டி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாகமண்டலா பகுதியில் காவிரி ஆற்றங்கரையையொட்டிய பகுதி முழுவதும் வெள்ள நீர் புகுந்து ஆர்ப்பரித்து செல்கிறது. அதுபோல் பாகமண்டலா, கரடிகோடு, கூடிகே, குய்யா, நாபொக்லு, பேத்ரி, பூக்கோலா உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த பகுதியில் தீயணைப்பு துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து ரப்பர் படகுகள் மூலம் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து வருகிறார்கள்.

மடிகேரி தாலுகாவில் ஓடும் அட்டிஒலே ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கந்தூர் அருகே காட்டக்கேரி தந்திபாலம் பகுதியில் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து தீவுப்போல் காட்சி அளிக்கிறது. 25 வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசித்து வந்த பெரும்பாலானோர் வெளியேறி பள்ளிகளில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த சிலர் அருகில் இருந்த மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இரு குடும்பத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களது கதி என்ன? என்பது தெரியவில்லை. சிலர் ஆங்காங்கே இருந்த மரங்களில் சிக்கி உயிர்தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிர் பலி ஏற்பட்டு இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் மக்கந்தூர் அருகே தொட்டகுண்டு பெட்டா பகுதியில் மலையில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது விழுந்தன. மேலும் மழை நீரும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அங்கு வசித்து வந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் அருகில் இருந்த மேடான பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தந்திபாலம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் உணவு கிடைக்காமல் நேற்று முன்தினம் முதல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா முதல்-மந்திரி குமாரசாமிக்கு பரிந்துரை செய்தார்.

இதைதொடர்ந்து குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், குடகு மாவட்டம் மக்கந்தூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கும் படி மத்திய ராணுவத் துறை மந்திரியிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அவரும் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்க ஹெலிகாப்டர் தருவதாக உறுதி அளித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிதவிக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் ஸ்ரீவித்யா தெரிவித்தார்.

மங்களூருவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் குடகிற்கு நேற்று மாலை வந்தது. இதற்கிடையே குடகில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் பனிப்பொழிவும் அதிகமாக இருக்கிறது. இதனால் ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. சீதோஷ்ண நிலையை பொறுத்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மக்கள் தஞ்சமடைந்த மலைப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கி அதே பகுதியை சேர்ந்த யஷ்வந்த், வெங்கட்ரமணா, பவன் ஆகியோர் உடல் நசுங்கி செத்தனர். மேலும் யத்தீஷ் என்பவர் மண்சரிவில் சிக்கி படுகாயமடைந்தார். அவர் மடிகேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுபோல் மடிகேரி அருகே தாலத்தமனே பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு மின்வயர் அறுந்துவிழுந்து கிடந்தது. அதே பகுதியை சேர்ந்த அம்மவ்வா (வயது 58) என்பவர் மின்வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உடல் கருகி செத்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தந்திபாலம் பகுதியில் இருந்த இரும்பு பாலமும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

இதுதவிர கனமழைக்கு மடிகேரி டவுன் மேக்ரி அபெக்ஸ் பகுதியில் உள்ள முத்தப்பா கோவில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. சம்பவ நடந்த நேரத்தில் அந்த வீட்டில் யாரும் இல்லை. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அதுபோல் அந்தப் பகுதியில் மண்சரிவால் மற்றொரு வீடும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மடிகேரி பகுதியில் மண்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மடிகேரி அருகே மக்கந்தூர் பகுதியில் தரைத்தளத்தில் இருந்து தண்ணீர் ஊற்றெடுத்து வீடுக்குள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.

விராஜ்பேட்டை தாலுகாவில் பெய்து வரும் கனமழையால் லட்சுமணதீர்த்த நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த காட்டாற்று வெள்ளம் கரையோரம் உள்ள காபி தோட்டங்கள், நெல் வயல்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது. விராஜ்பேட்டை- வயநாடு சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த சாலையிலும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் விராஜ்பேட்டை-மடிகேரி, விராஜ்பேட்டை- கோணிகொப்பா உள்ளிட்ட சாலைகளிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதற்கிடையே குடகில் உள்ள ஹாரங்கி அணையில் இருந்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 33,549 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அத்துடன் மழை நீரும் பெருக்கெடுத்து செல்வதால், ஹாரங்கி அணை கால்வாய்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அந்த கால்வாய்களை ஒட்டிய 25-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் குடகு மாவட்டம் குட்டி தீவுப்போல் காட்சி அளிக்கிறது. மாவட்டம் முழுவதும் கனமழைக்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்து நாசமாகி உள்ளன.

கலபுரகி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழைக்கு கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா கித்தலசிரோரு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு என்பவரது வீடு மீது பீசமாசாய் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பிரபுவின் வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகள் தூங்கிக்கொண்டிருந்த பிரபு, அவரது மனைவி லட்சுமிபாய் (30), இந்த தம்பதியின் மகள்கள் அம்பிகா (10), எல்லம்மா என்கிற சிவம்மா (8) ஆகிய 4 பேரும் மீது விழுந்து அமுக்கியது. இதனால் அவர்கள் 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர்.

உடனே அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்து பிரபு உள்பட 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமிபாய், அவரது மகள்கள் அம்பிகா, எல்லம்மா ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். பிரபுவுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபு- லட்சுமிபாய் தம்பதி கூலி தொழிலாளர்கள் ஆவர். இதுபற்றி அறிந்ததும் நிம்பர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஹாசன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கனமழை நீடித்து வருகிறது. குறிப்பாக அரக்கல்கோடு, சக்லேஷ்புரா தாலுகாக்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இரு தாலுகாக்களிலும் பல சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. அரக்கல்கோடு தாலுகா ராமநாதபுரா அருகே சுப்பிரமணியா நகரில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் அந்த வீடுகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர அரக்கல்கோடு தாலுகாவில் கேரளபுரா, பசவபட்டணா, ராமநாதபுரா, தட்டபுரா, மாதபுரா, தாலகுந்தி, மஞ்சுநாதபுரா ஆகிய 7 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. ராமநாதபுரா பகுதியில் உள்ள லட்சுமணேஸ்வரர் கோவிலை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். தொடர் மழையால் ஹாசன்-மங்களூரு செல்லும் சீராடி மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 நாட்களாக அந்த சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிணகன்னடா, கார்வார் மாவட்டங்களிலும் கடந்த ஒருவாரமாக கனமழை நீடித்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகாவில் பெய்த கனமழையால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. சுள்ளியா தாலுகாவில் பெய்த மழைக்கு நுஜில்லா என்ற கிராமத்தை மழைநீர் சூழ்ந்தது. குதிரேமச்சிலு பகுதியில் பெய்த மழைக்கு 20 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கர்நாடகத்தில் இதுவரை கனமழைக்கு தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...