கூடலூர்-குமுளி மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு


கூடலூர்-குமுளி மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு
x
தினத்தந்தி 18 Aug 2018 3:00 AM IST (Updated: 17 Aug 2018 11:04 PM IST)
t-max-icont-min-icon

குமுளி மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால் 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மழை நீடிப்பதால் சீரமைப்பு பணி மந்தமாக நடந்து வருகிறது.

கூடலூர்,



தமிழக-கேரள மாநில எல்லைகளில், தேனி மாவட்டத்தின் வழியாக அமைந்துள்ள 3 மலைப்பாதைகளில் முக்கிய மலைப்பாதையாக கூடலூர்-குமுளி மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக குமுளி, தேக்கடி, சபரிமலை பகுதிகளுக்கு சென்று வரலாம். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மலைப்பாதையில் சென்று வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, இந்த மலைப்பாதையில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மழைக் காலத்தில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. விபத்து தடுப்பு நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்படுவது கிடையாது.

தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த மலைப்பாதை விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தாமல் இருக்கும் நிலைமையே நீடிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைப்பாதையில் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்ததால் விபத்துகள் ஏற்பட்டன.

இதையடுத்து போலீசாரே முன்வந்து இந்த செடி, கொடிகளை அகற்றினர். கடந்த ஆண்டும் இந்த மலைப்பாதையில் மாதாகோவில் உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதமும் மாதா கோவில் அருகில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. அப்போது தற்காலிகமாக அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த மண்சரிவை ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொண்டாவது, இந்த மலைப்பாதையில் போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து இருக்கலாம். ஆனால், அதையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செய்யவில்லை.
இந்தநிலையில் இரைச்சல் பாலம் அருகில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே மலைப்பாதையின் நடுவில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. அதை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதனை ஆய்வு செய்யவோ, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவோ இல்லை.

இந்த சூழ்நிலையில் கடந்த 15-ந்தேதி இரைச்சல் பாலம் அருகில் விரிசல் ஏற்பட்டு இருந்த இடத்தில் பலத்த மழையால் மண் அரிப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் பாதி அளவுக்கு மலைப்பாதை அரித்து செல்லப்பட்டது. இதனால், குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மலைப்பாதையை சீரமைக்க போதிய அளவில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இல்லை. இதனால், சீரமைப்பு பணிகளை முழுவீச்சில் தொடங்க முடியவில்லை. இதற்கிடையே மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணியில் மந்தமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த மலைப்பாதையில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலையில் மேலும் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மாதாகோவில் அருகில் மண் சரிந்து விழுந்து மலைப்பாதையை அடைத்துள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் போலீஸ் துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாதையோரத்தில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும், சில இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது.

இதனால் இந்த மலைப்பாதையில் வாகன போக்குவரத்து மட்டும் இன்றி பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. தமிழக-கேரள மாநிலம் இடையிலான முக்கிய மலைப்பாதையாக திகழ்வதாலும், கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாலும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், மேலும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் போதிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story