கேரளாவுக்கு போக்குவரத்து துண்டிப்பு நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல்
தேனியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 3 மலைப்பாதைகளும் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நிவாரண பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி வழியாக செல்ல 3 மலைப்பாதைகள் உள்ளன. இதில் போடிமெட்டு வழியாக பூப்பாறை, மூணாறு, கொச்சி போன்ற இடங்களுக்கு செல்லலாம். குமுளி, தேக்கடி, வண்டிப்பெரியாறு, சபரிமலை போன்ற பகுதிகளுக்கு குமுளி மலைப்பாதை வழியாக செல்லலாம்.
கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கட்டப்பனை, நெடுங்கண்டம், இடுக்கி, தொடுபுழா போன்ற பகுதிகளுக்கு சென்று வரலாம். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக 3 மலைப்பாதைகளும் ஒவ்வொன்றாக துண்டிக்கப்பட்டு தற்போது முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
குமுளி மலைப்பாதையில் 3 நாட்களுக்கு முன்பு பலத்த மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. 3 நாட்களாக அங்கு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குமுளியை அடுத்த கத்திப்பாறை பகுதியிலும் பலத்த மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் சப்பாத்து, வண்டிப்பெரியார் பகுதிகளில் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. போடிமெட்டில் இருந்து பூப்பாறை செல்லும் சாலையில் சுண்டல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
நேற்று கார்கள், ஜீப்கள் செல்லும் அளவுக்கு பாதை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் அந்த சாலையில் பூப்பாறை வரை மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும். அதை கடந்து மாட்டுப்பட்டி, ஆணையிரங்கல் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும், பூப்பாறையில் இருந்து நெடுங்கண்டம் செல்லும் சாலையிலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், போடியில் இருந்து மூணாறுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், கம்பம்மெட்டு மலைப்பாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை இடுக்கி, தொடுபுழா பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வந்தன. நிவாரண பொருட்களும் இந்த வழியாக கொண்டு செல்லப்பட்டன. தற்போது இந்த மலைப்பாதையிலும் கட்டப்பனை, தொடுபுழா, செருதோணி போன்ற பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை உருவாகி உள்ளது.
தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் வாகனங்கள் எதுவும் கட்டப்பனை வழியாக அனுமதிக்கப்படவில்லை. இதனால், கம்பம்மெட்டு வழியாகவும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது நிவாரணப் பொருட் கள் கட்டப்பனை வரை கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் நிவாரணப் பொருட் கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மற்ற வாகனங்கள், கம்பம்மெட்டு சோதனை சாவடியிலேயே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. 3 மலைப்பாதைகளும் துண்டிக்கப்பட்டதால் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story