ஆற்றங்கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் - வெள்ள கண்காணிப்பு அதிகாரி


ஆற்றங்கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் - வெள்ள கண்காணிப்பு அதிகாரி
x
தினத்தந்தி 18 Aug 2018 4:45 AM IST (Updated: 18 Aug 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் ஆற்றங்கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் சரிசெய்ய 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன என்று வெள்ள கண்காணிப்பு அதிகாரி சுனில் பாலிவால் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வெள்ள கண்காணிப்பு அதிகாரியும், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருமான சுனில் பாலிவால் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வெள்ள கண்காணிப்பு அதிகாரி சுனில் பாலிவால் பேசும் போது கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வெண்ணாறு, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. இதனை தொடர்ந்து கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி, பத்திரிகைகள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி உள்ளிட்டவைகள் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் பாதிக்கப்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ள அளக்குடி, நாதல்படுகை, வெள்ளமணல், முதலைமேடு திட்டு, மேலவளைவு வடரங்கம், மாதிரிவேளூர், சோதியக்குடி, கோபாலசமுத்திரம், திருமைலாடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீஸ் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உள்ளடக்கிய குழுக்கள் மூலம் கரையோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாநில பேரிடர் படை பிரிவை சேர்ந்த பயிற்சி பெற்ற 68 பேர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 153 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். தற்பொழுது கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் அதிகமாக வெளியேறும்போது கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 19 ஆயிரத்து 950 மணல் மூட்டைகளும், 73 ஆயிரம் பாலித்தீன் பைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கொள்ளிடத்தில் திறந்துவிடப்படும் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தலைமையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வெள்ள பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மக்களை தங்க வைப்பதற்காக 283 பள்ளிக் கட்டிடங்கள், 23 கல்லூரி கட்டிடங்கள், 15 சமுதாய கூடங்கள், 144 பொதுக்கட்டிடங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. வெள்ளப்பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1077-ல் தொடர்பு கொள்ளலாம். வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், நாகை துணை கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story