திருமானூர், விக்கிரமங்கலம் அருகே கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது


திருமானூர், விக்கிரமங்கலம் அருகே கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 18 Aug 2018 3:45 AM IST (Updated: 18 Aug 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர், விக்கிரமங்கலம் அருகே கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து பொதுமக்கள் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

திருமானூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையில், இருந்து காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வருவதால் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே விழுப்பனங்குறிச்சி, வரப்பன்குறிச்சி, வைப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

வைப்பூர் கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால், பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர். மேலும், நெல் பயிரிட்டுள்ள வயல்களை தண்ணீர் சூழ்ந்துள்ளன. கொள்ளிடத்தின் நடுவே அமைந்துள்ள நடுத்திட்டு ராமநல்லூர் கிராம மக்கள் அங்குள்ள பச்சையம்மன் கோவிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால், பாதித்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், தாசில்தார் முத்துலட்சுமி உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். அரியலூர் தீயணைப்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்ளிடம் கரையோர கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் விக்கிரமங்கலம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதால், இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் அணைக்குடி மற்றும் முட்டுவாஞ்சேரி பகுதிகளில் கொள்ளிடம் கரையில் சிறு உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விளைநிலங்கள், வீடுகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மணல் மூட்டைகளை கொண்டு கரைகளை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அணைக்குடி கிராமத்தை வெள்ள நீர் சூழ்ந்து விட்டகாரணத்தால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரையும் அதிகாரிகள் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முட்டுவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் போன்ற ஊர்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கொள்ளிடம் கரையோர பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனவும் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story