பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே பூட்டிக் கிடக்கும் கழிவறைகளை திறந்துவைக்க பொதுமக்கள் கோரிக்கை


பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே பூட்டிக் கிடக்கும் கழிவறைகளை திறந்துவைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2018 10:45 PM GMT (Updated: 17 Aug 2018 8:01 PM GMT)

பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே பூட்டிக் கிடக்கும் கழிவறைகளை பயன்பாட்டுக்கு திறந்துவைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பூர்,

சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே மாதவரம் நெடுஞ்சாலையோரம் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக இலவச கழிவறைகள் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தன. பெரம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெரம்பூர் ரெயில் நிலையம், பஸ்நிலையம், தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் இதை பயன்படுத்தி வந்தனர்.

அதன்பிறகு இந்த கழிவறைகள் புதுப்பிக்கும் பணிக்காக மூடப்பட்டன. தற்போது கழிவறைகள் புதுப்பிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன. ஆனால் என்ன காரணத்தாலோ இன்னும் கழிவறைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக பூட்டியே கிடக்கின்றன.

இதனால் ரெயில் நிலையம், பஸ் நிலையம், தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.

கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம்

பெரம்பூர் குளக்கரை சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தின் உள்ளே ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை உள்ளது. தற்போது இது பயன்பாட்டில் உள்ளது. இந்த கழிவறையில் இருந்து கழிவுநீர் தொட்டிக்கு செல்லும் குழாய் உடைந்து உள்ளதால் கழிவுநீர் முழுவதும் விளையாட்டு மைதானத்தில் வெளியேறி தேங்கி நிற்கிறது.

இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர் கேடும் ஏற்படுகிறது. விளையாட்டு மைதானத்துக்கு வருபவர்கள் இதை பார்த்து முகம் சுழித்துவிட்டு செல்கின்றனர். சேதமடைந்த கழிவுநீர் குழாயை சீரமைக்க கோரி சென்னை மாநகராட்சி 70-வது வார்டு அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

எனவே பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே பூட்டிக் கிடக்கும் கழிவறைகளை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கவேண்டும். விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவறையில் சேதமடைந்த கழிவுநீர் குழாயை சீரமைத்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story