திருச்சி- கல்லணை தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு


திருச்சி- கல்லணை தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2018 4:00 AM IST (Updated: 18 Aug 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் திருச்சி- கல்லணை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 63 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் காவிரி பெருக்கெடுத்து கல்லணை நோக்கி ஓடுகிறது. கல்லணை அருகே உள்ள உத்தமர் சீலி, திருவளர்சோலை, கிளிக்கூடு, பொன்னுரங்க புரம், நடுவெட்டி பகுதிகளில் காவிரி மிகவும் தாழ்வான நிலையில் செல்கிறது. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தண்ணீர் வெளியேறி தரைப்பாலம் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் இந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நேற்று காலை திருச்சி- கல்லணை சாலையில் உத்தமர் சீலி பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள வாழைத்தோப்புகளும் தண்ணீரில் மூழ்கின. பெருக் கெடுத்து ஓடும் காவிரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் நாட்டு வாய்க்காலில் கலந்து விட்டது. இதனால் நாட்டு வாய்க்காலும், காவிரியும் ஒன்றானது போல் காட்சி அளிக்கிறது.

கல்லணை சாலையில் உள்ள தரைப்பாலத்தில் தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டு இருப்பதால் அந்த சாலை நேற்று காலையில் இருந்து மூடப்பட்டது. இதனால் திருச்சி- கல்லணை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

Next Story