வீதியில் குப்பைகளை கொட்டிய டாஸ்மாக் பாருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


வீதியில் குப்பைகளை கொட்டிய டாஸ்மாக் பாருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 18 Aug 2018 3:30 AM IST (Updated: 18 Aug 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் வீதியில் குப்பைகளை கொட்டிய டாஸ்மாக் பாருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஊட்டி,


நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இடையே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என்று பொதுமக்கள் தனித்தனியாக சுகாதார பணியாளர்களிடம் பிரித்து கொடுத்து வருகின்றனர். நகராட்சி வாகனம் மூலம் தினமும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்டப்பட்டு வந்ததை தொடர்ந்து, ஊட்டி நகராட்சியில் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன. அந்த இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊட்டி கேஷினோ சந்திப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதாக ஊட்டி நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்தது. அதனை தொடர்ந்து நேற்று நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டனர்.

அப்போது டாஸ்மாக் பாரில் இருந்து குப்பைகள் சாலையில் கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீதியில் குப்பைகள் கொட்டி சுகாதாரம் இல்லாமல் வைத்திருந்த டாஸ்மாக் பாருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. மேலும் குப்பைகளை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி கூறும்போது, ஊட்டி நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை வெளிப்பகுதி மற்றும் வீதிகளில் கொட்டுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, அந்தந்த பகுதிகளுக்கு வரும் சுகாதார பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்கள் கொடு க்க வேண்டும் என்றார். 

Next Story