ஊட்டியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன அவலாஞ்சி அணை மீண்டும் திறப்பு


ஊட்டியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன அவலாஞ்சி அணை மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 18 Aug 2018 3:15 AM IST (Updated: 18 Aug 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் பலத்த மழைக்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவலாஞ்சி அணை மீண்டும் நிரம்பியதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஊட்டி,



ஊட்டியில் தொடர் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. ஊட்டி-இத்தலார் சாலையில் மரவியல் பூங்கா அருகே நேற்று முன்தினம் இரவு சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று வேருடன் சாய்ந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. தகவல் அறிந்ததும் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஊட்டி நகரில் பல்வேறு இடங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள், மின்வாரிய ஊழியர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் மின் வாள்கள் மூலம் மரத்தை வெட்டி அகற்றும் பணி தொடங்கியது. அதில் அரசு பஸ் மீது நின்றபடி மின்வாள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கால் தவறி தீயணைப்பு வீரர் ஸ்ரீதர் என்பவர் பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவருக்கு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 1½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு மரம் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டது.

இதையடுத்து அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது. இதனிடையே மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஊட்டி-கோழிப்பண்ணை சாலை மார்லிமந்து அணை பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர்.

ஊட்டி- மஞ்சூர் சாலை லவ்டேல், ஊட்டி-கூடலூர் சாலை சாண்டிநல்லா,சோலூர் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் 5 மரங்கள் முறிந்து விழுந்தன. கனமழை காரணமாக ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி-இத்தலார் சாலையில் சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால், அவலாஞ்சி அணை முழு கொள்ளளவான 171 அடியை 2-வது முறையாக எட்டியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு மீண்டும் அணை திறக்கப்பட்டது. வினாடிக்கு 8 ஆயிரத்து 413 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் அவலாஞ்சி அணையின் கரையோரத்தில் உள்ள அம்மன் கோவிலையும் எமரால்டு எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் பின்பக்க சுவர்கள் இடிந்து விழுந்தன. அங்கு வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். நேரு நகரில் அங்கன்வாடி மையத்தின் முன்பு கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர் இடிந்தது.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரில் அளவு அதிகரித்து கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குந்தா அணையில் இருந்து மின்உற்பத்திக்கு பிறகு கெத்தை அணைக்கு தண்ணீர் செல்லும் ராட்சத குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்வதால், அடைப்பை சரி செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கெத்தை, பரளி, பில்லூர் அணைகளில் மின்உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளது.

பந்தலூர் அருகே பாலவயல் பகுதியில் மேலும் 2 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசித்தவர்கள் அம்பலமூலா அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை வருவாய்த்துறையினர் செய்து கொடுத்துள்ளனர். 

Next Story