கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
கீழணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. புயல் பாதுகாப்பு மையத்துக்கு செல்ல கிராம மக்கள் மறுத்தனர்.
சிதம்பரம்,
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், அங்கிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் காவிரி ஆற்றில் விடப்பட்டு உள்ளது. காவிரியின் கடைமடை பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணைக்கு தண்ணீர் வந்தது. இங்கிருந்து கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கும், கொள்ளிடம் ஆற்றுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொடியம்பாளையம் என்ற இடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. அதிகப்படியான தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், முகத்துவாரம் தூர்வாரப்படாததாலும் வங்கக்கடல் காவிரி நீரை உள்வாங்கவில்லை. இதனால் காவிரிநீர் அருகில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் உட்புகுந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு உட்புகுந்ததால் பெராம்பட்டுக்கும், திட்டுகாட்டூருக்கும் இடையே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
கீழகுண்டலபாடி, திட்டுகாட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், நடுத்திட்டு, வேளக்குடி, மடத்தான்தோப்பு, பெராம்பட்டு ஆகிய 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
குறிப்பாக கீழகுண்டலபாடி, திட்டுகாட்டூர், அக்கரைஜெயங்கொண்டபட்டினம் ஆகிய 3 கிராமங்களை சுற்றி நாலாபுறமும் வெள்ளம் சூழ்ந்ததால் அந்த பகுதி தீவுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் கடந்த 14-ந் தேதி முதல் கிராம மக்கள் படகுகள் மூலம் சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கீழணையில் இருந்து நேற்று காலையில் வினாடிக்கு 1000 கன அடி நீர் வீராணம் ஏரிக்கும், உபரிநீராக வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரித்து மாலை 4 மணி அளவில் வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி நீரும், இரவு 7 மணி அளவில் வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீரும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருபுற கரையையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதையடுத்து கொள்ளிடக் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. கலெக் டர் தண்டபாணி தலைமையில் அதிகாரிகள் வெள்ளம் சூழ்ந்த கிராம பகுதிகளை நேரில் பார்வையிட்டு அங்கு வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
மேலும் திட்டுகாட்டூர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய 3 கிராம மக்களையும், கீழகுண்டலபாடியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து, கிராம மக்கள் யாரும் புயல் பாதுகாப்பு மையத்துக்கு செல்லவில்லை. இதனால் புயல் பாதுகாப்பு மையம் வெறிச்சோடி காணப்பட்டது.
நேற்று மாலையில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் கீழகுண்டலபாடியில் 30 வீடுகளுக்குள்ளும், மடத்தான்தோப்பில் 50 வீடுகளுக்குள்ளும், வேளக்குடியில் 50 வீடுகளுக்குள்ளும், திட்டுகாட்டூரில் 70 வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சிலர் மூட்டை முடிச்சுகளுடன் மேடான பகுதியில் தஞ்சமடைந்தனர். சில கிராமங்களில் உள்ள தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மார்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சிதம்பரம் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் கொள்ளிடம் கரையோரத்தில் உள்ள கஞ்சங்கொல்லை, கொண்டாயிருப்பு சிறுகாட்டூர் உள்பட 20 கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்ட குழாய் புதைக்கப்பட்டுள்ள இடங்களில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கரை உடைந்து விடுமோ என்ற அச்சத்தில் ஆச்சாள்புரம், எய்யலூர் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். எய்யலூர் கிராமத்தில் கொள்ளிடக்கரையோரத்தில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.
Related Tags :
Next Story