திருச்சியில் காவிரி, கொள்ளிடம் ஆறுகள் கடல் போல் காட்சி அளிக்கின்றன


திருச்சியில் காவிரி, கொள்ளிடம் ஆறுகள் கடல் போல் காட்சி அளிக்கின்றன
x
தினத்தந்தி 18 Aug 2018 4:45 AM IST (Updated: 18 Aug 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் காவிரி, கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால் இரண்டு ஆறுகளும் கடல் போல் காட்சி அளிக்கின்றன. மேலும் நீர் திறப்பு அதிகரித்தால் ஊர்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்படும்.

திருச்சி,

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் அங்குள்ள அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடந்த மாதம் 22-ந்தேதி மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பின்னர் நீர் வரத்து குறைந்து கொண்டே சென்றதாலும், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் நீர்மட்டம் குறைந்து 116 அடி ஆனது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் பலத்த மழை பெய்ததை தொடர்ந்து நீர் திறப்பின் அளவு ஒரு லட்சத்துக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை கடந்த வாரம் மீண்டும் நிரம்பியது.

நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடியாக இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி கரூர் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இங்கிருந்து காவிரியில் 63 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இதனால் இந்த இரு ஆறுகளிலும் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் படித்துறைகளில் கடல் அலை போல் மோதி செல்கிறது.

நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீருடன் அமராவதி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும், பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் சேர்ந்து கொண்டதால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வினாடிக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் திருச்சி மாவட்டத்திற்கு பாதிப்பு இல்லை.

காவிரியில் வினாடிக்கு 63 ஆயிரம் கன அடிக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படமாட்டாது. மீதி தண்ணீர் அனைத்தும் கொள்ளிடத்தில் தான் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது வரை கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப்பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இந்த தண்ணீரும் இன்று (சனிக்கிழமை) மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்து விட்டால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் ஒட்டுமொத்தமாக வினாடிக்கு 3 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். அப்படி ஒரு சூழல் வந்தால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஊர்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story